மாதம் ரூ.1 லட்சம் சம்பளத்தில் டெலிகாலர் வேலை வாங்கி தருவதாக கூறி கம்போடியா நாட்டில் வேலைக்கு அனுப்பி சட்டவிரோத வேலையில் ஈடுபட வலியுறுத்தியும் செய்ய மறுத்தால் விபசாரத்திற்கு விற்று விடுவதாக கூறி மிரட்டி இளம்பெண்ணை அடித்து சித்ரவதை செய்துள்ளனர்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் திருமணமான 27 வயதுடைய இளம்பெண் பட்டபடிப்பு முடித்து வேலை தேடி வந்துள்ளார். இதனிடையே உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் கம்போடியா நாட்டில் ரூ.1 லட்சம் சம்பளத்திற்கு வேலை இருப்பதாக வந்த விளம்பரத்தை நம்பி மோசடி கும்பலிடம் சிக்கிக்கொண்டார். இதனிடையே டெலிகாலர் என்று கூறி கம்போடியா நாட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட அப்பெண் சட்டவிரோதமான வேலையில் ஈடுபடுத்தியுள்ளனர். இதையடுத்து அங்கிருந்த இந்தியர்கள் உதவியுடன் மீண்டு கம்போடியாவில் இருந்து இந்தியா வந்துள்ளார்.
இதையடுத்து இந்தியா வந்த அப்பெண் புதுச்சேரி காவல்துறை தலைமை இயக்குநரிடம் புகார் அளித்தார். அந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்துறை இயக்குநர் மனோஜ் குமார் லால் சிபிசிஐடி பிரிவுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையில் விசாரணை செய்ததில் இதன் முக்கிய குற்றவாளியான புதுச்சேரியை சேர்ந்த ஏஜெண்ட் முருகன் என்பவரை கைது செய்தனர்.
இதுகுறித்து புதுச்சேரி சிபிசிஐடி கூறுகையில், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதில் கடந்த 01.07.2022 அன்று புதுச்சேரியில் இயங்கி வரும் உள்ளூர் தனியார் தொலைக்காட்சியில் கம்போடியா நாட்டில் டெலிகாலர் வேலை வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கு மாதம் சம்பளம் ரூ.1 லட்சம் என்றும் விளம்பரம் ஒளிபரப்பப்பட்டது. மேலும் அதில் முருகன் என்பவரின் கைப்பேசி எண் விளம்பரத்தில் இருந்தது. அந்த தொலைபேசி எண் மூலம் பாதிக்கப்பட்ட பெண் மேற்படி முருகனை தொடர்பு கொண்டபோது, அவர் கம்போடியாவில் டெலிகாலர் (Telecaller) வேலை வாங்கித்தருவதாக உறுதியளித்துள்ளார். அதற்கு சென்னையை சேர்ந்த ராஜ்குமார் உதவியுடன் விசா உள்பட கமிஷன் தொகை ரூ.4 லட்சம் பேரம் பேசி, ரூ3.25 லட்சம் தரவேண்டும் என்று கூறியுள்ளனர். அதனை நம்பி பாதிக்கபட்ட பெண் மேற்கூறிய முருகனிடம் பணத்தை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது என்கின்றனர்
ஆனால், பாதிக்கப்பட்ட பெண்ணை கம்போடியா நாட்டிற்கு சுற்றுலா விசா (Tourist Visa) மூலம் அனுப்பி, அங்கு ஒரு கம்பெனியில் டெலிகாலர் வேலைக்கு பதிலாக சட்டத்திற்கு புறம்பாக ஊழல் (Scam) வேலையில் ஈடுபட சொல்லியுள்ளனர். அதற்கு அந்த பெண் மறுத்ததால் ஜான் என்பவரும் அந்த நிறுவனத்தின் மேலாளர் அட்டிடோ என்பவரும் சேர்ந்து மேற்படி பெண்ணை அமெரிக்கா டாலர் மதிப்பு $3500 (ரூ.2,76,500/-) விலைகொடுத்து வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இந்த ஊழல் (scam) வேலையை செய்யவில்லை என்றால் விபச்சாரத்திற்கு மேற்கூறிய விலைக்கு விற்றுவிடுவதாகவும் மிரட்டி ஒரு இடத்தில் அடைத்து வைத்து அடித்தும், எலக்ட்ரிக் ஷாக் வைத்து துன்புறுத்தியுள்ளனர்.
மேலும், இவரையும் இவரது கணவரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். பிறகு அதிஷ்டவசமாக அங்கிருந்த வேறு இந்தியர்கள் உதவியுடன் அங்கிருந்து தப்பித்து இந்தியா வந்துள்ளார் கூறுகின்றனர். இந்த வழக்கை விசாரணை செய்ய குற்றம் மற்றும் புலனாய்வு பிரிவின் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாரா. சைத்தன்யா அறிவுறுத்தல்படி குற்றப்புலானாய்வு பரிவு காவல் கண்காணிப்பாளர் எஸ்.பழனிவேலு மேற்பார்வையிலும், சிபிசிஐடி ஆய்வாளர் டி.சுரேஷ்பாபு தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டு, புதுச்சேரியை சேர்ந்த முருகன் என்ற குற்றவாளியை கைது செய்தனர்.
மேலும், முருகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த குற்றம் சம்பவம் குறித்து சிபிசிஐடி காவல் துறையிடம் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை புதுச்சேரி காலாபட்டு மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் இவருடன் இணைந்து இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட சென்னையை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்ய சென்னையில் முகாமிட்டு தேடிவருகின்றனர். இது போன்று யாராவது வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக கூறி தெரிவித்தால் அதை இங்குள்ள தூதரகம் மூலம் உறுதிப்படுத்திய பின்னர் அடுத்தகட்ட முயற்சியை மேற்கொள்ளும் சிபிசிஐடி காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.