புதுச்சேரி அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பள்ளி முன்பு பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுச்சேரி புஸ்சி வீதியில் பழைய சட்டக்கல்லூரி கட்டிடத்தில் சுப்ரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இங்கு பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்பில் 105 மாணவிகள் படித்து வந்தனர். இந்த பள்ளி கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. மேலும் மாணவிகளின் எண்ணிக்கையும் குறைந்ததால் இந்த பள்ளியை குருசுக்குப்பத்தில் உள்ள என்.கே.சி. அரசுப்பள்ளியுடன் ஒருங்கிணைத்து நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது.


அதன்படி, சுப்ரமணிய பாரதியார் பள்ளியில் படித்த பிளஸ்-1, பிளஸ்-2 மாணவிகள் குருசுக்குப்பம் என்.கே.சி. அரசு பெண்கள் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரு பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதால் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்ய கல்வித்துறை முடிவு செய்தது. இதற்காக ஒருசில ஆசிரியர்களுக்கு வாய்மொழி உத்தரவும் வழங்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை என்றும் கூறியும் கடந்த 15-ந் தேதி மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இந்த போராட்டத்துக்கு பின்புலமாக சில ஆசிரியர்கள் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 2 பள்ளி மாணவிகளையும் பிரித்து ஒரு சில ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. 2 பள்ளிகளையும் சேர்ந்த மாணவிகளும் தனித் தனியாகவே செயல்பட்டு வந்ததால் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இந்தநிலையில் சுப்ரமணிய பாரதியார், என்.கே.சி. பள்ளியில் படிக்கும் மாணவிகள் இடையே நேற்று திடீரென மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவருக்கொருவர் கைகளால் தாக்கி கொண்டனர். மாணவிகளுக்கு ஆதரவாக அவர்களது பெற்றோரும் மோதலில் ஈடுபட்டனர். பெற்றோர்கள் சிலர் மாணவிகளை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியே களேபரமாக காட்சி அளித்தது.


ஒரு கட்டத்தில், மாணவிகள் மற்றும் பெற்றோர் மறியலிலும் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்டவர்களிடம், பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து முத்தியால்பேட்டை போலீசார் அப்புறப்படுத்தினார்கள். இந்தநிலையில் என்.கே.சி. அரசுப்பள்ளிக்கு அமைச்சர் லட்சுமிநாராயணன், பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் விரைந்து சென்றனர். அவர்கள் மாணவிகளின் பெற்றோருடன் பேச்சுவார்த்தை நடத்தினா்.


அப்போது மாணவிகள் சிலர் அளவுக்கதிகமாக பேசவே அமைச்சர் லட்சுமிநாராயணன் அவர்களை கடிந்துகொண்டார். படிக்க வேண்டிய காலத்தில் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் என்று எச்சரிக்கை விடுத்தார். தொடா்ந்து மோதல் ஏற்படும் சூழல் இருந்ததால் பள்ளிக்கு விடுமுறை விடுமாறு அவர் கல்வித்துறை அதிகாரிகளை அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. வருகிற 22-ந்தேதி தேர்வு எழுத வந்தால் மட்டும் போதும் என்று தெரிவிக்கப்பட்டது. மீண்டும் பழைய முறைப்படி சுப்ரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் புஸ்சி வீதியில் உள்ள கட்டிடத்தில் (பழைய சட்டக்கல்லூரி) தேர்வு எழுத வருமாறு அறிவுறுத்தப்பட்டனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்து மாணவிகளும், பெற்றோரும் கலைந்து சென்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர