பாதுகாப்பில்லாத பள்ளி கட்டிடம் 


புதுச்சேரி  பழைய சட்டக்கல்லூரி வளாகத்தில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வந்தது. பழமையான கட்டிடம் சேதமடைந்ததால் அங்கு மாணவர்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை உருவானது. இதையடுத்து கடந்த கல்வியாண்டில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் பள்ளி மாணவிகள் குருசுகுப்பத்தில் உள்ள என்.கே.சி. பள்ளிக்கு மாற்றப்பட்டனர். அங்கு 2 பள்ளிகளும் ஷிப்ட் முறையில் இயங்கி வந்தது. என்.கே.சி. பள்ளி மாணவர்கள் தொடர்ந்து பள்ளி இயங்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இந்த ஆண்டு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகளை சவரிராயலு வீதியில் உள்ள திரு.வி.க. ஆண்கள் பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.


நிரந்த இடம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு :


திரு.வி.க. பள்ளி மாணவர்கள் கந்தப்ப முதலியார் வீதியில் உள்ள வீரமாமுனிவர் ஆண்கள் பள்ளிக்கு மாற்றி ஷிப்ட் முறையில் நடத்த முடிவு செய்தனர். திரு.வி.க. பள்ளி மாணவர்கள் வீரமாமுனிவர் பள்ளிக்கு செல்ல மறுத்து போராட்டம் நடத்தினர். அதேபோல வீரமாமுனிவர் பள்ளி மாணவர்களும் ஷிப்ட் முறையில் பள்ளி நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று பள்ளி திறந்த போது சுப்பிரமணிய பாரதியர் பள்ளி மாணவிகள் திரு.வி.க. பள்ளிக்கு சென்ற போது பள்ளி நடைபெறவில்லை. இதனால் பள்ளிக்கு விடுமுறை அறிவித்தனர். இந்த நிலையில்  இன்று திரு.வி.க. பள்ளிக்கு சுப்பிரமணிய பாரதியார் பள்ளி மாணவிகள் சென்றனர். திரு.வி.க. பள்ளி மாணவர்கள் பள்ளியின் கதவை பூட்டி, இது ஆண்கள் பள்ளி, எங்கள் பள்ளி எனக்கூறி போராட்டம் நடத்தினர்.  இதனால் பள்ளிக்கு இடம் இல்லாத நிலைக்கு சுப்பிரமணிய பாரதியர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் தள்ளப்பட்டனர்.


மாணவர்கள் சாலை மறியல் :


இதையடுத்து, மாணவிகள் கல்வித்துறை நோக்கி பெற்றோர்களுடன் செல்ல முயற்சித்தனர். அவர்கள் ஊர்வலமாக வந்து கம்பன் கலையரங்கில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டம் குறித்து தெரிந்த பல்வேறு சமூக அமைப்பை சேர்ந்தவர்கள் அங்கு திரண்டனர். மாணவிகளை ஊர்வலமாக வெங்கடசுப்பாரெட்டியார் சதுக்கத்துக்கு சமூக அமைப்பினர் அழைத்து வந்தனர். இதனிடையே நேரு எம்.எல்.ஏ. திரு.வி.க. பள்ளிக்கு சென்று மாணவர்களை சமாதானப்படுத்தினார். பின்னர் போராட்டம் நடத்திய இடத்துக்கு வந்த நேரு எம்.எல்.ஏ. மாணவிகளை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் மாணவிகள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் நேரு எம்.எல்.ஏ. அங்கிருந்து விலகிச்சென்றார்.


அமைச்சர் நமச்சிவாயம் பேச்சுவார்த்தை 


மாணவிகள் போராட்டத்தால் சாலைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. புதிய பஸ் நிலையத்திலிருந்து வந்த வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன. புஸ்சி வீதி, அண்ணாசாலை, கடலூர் வழியாக வந்த வாகனங்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்த அமைச்சர் நமச்சிவாயம் சம்பவ இடத்துக்கு நேரில் வந்தார். அப்போது மாணவிகள், சரமாரியாக கேள்வி எழுப்பினர். தங்களுக்கு தனியாக பள்ளி வளாகம் வேண்டும், ஷிப்ட் முறையில் பள்ளியை நடத்தக்கூடாது என கேட்டனர். இதையடுத்து அமைச்சர் நமச்சிவாயம், 2 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இதையடுத்து தொடர்ந்து மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். சுமார்1 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நடந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.