புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் நகர் மற்றும் கிராம பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. வீடுகளைச் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் இந்த மழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை எதிரொலியாக கருவடிக்குப்பம், பாவாணர் நகர், பூமியான்பேட்டை, ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர், உப்பறம் மணல்மேடு, நேதாஜி நகர், வாணரப்பேட்டை, வம்பாகீரப்பாளயைம் பகுதியில் மழைநீர் தேங்கியுள்ளது. ஒரு சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்தது.
இதனால் மக்கள் அவதிக்குள்ளாகினர். குறிப்பாக பாவாணர் நகர் பகுதியில் பல வீடுகளில் மழைநீர் புகுந்தது. அங்குள்ள நான்கு பிரதான சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. சாலையெங்கும் பள்ளங்கள் இருந்ததால், அப்பகுதியினரே தடுப்பு கட்டை கட்டியும், வாகனங்களை குறுக்கே நிறுத்தி போக்குவரத்தை தடை செய்தனர். தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த அரசு சார்பில் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மழையால் தொழிலாளர்கள், கட்டிட பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டதையடுத்து நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அரசை வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கருவடிக்குப்பம் பகுதியில் நரிக்குறவர் சமுதாய மக்கள் வசிக்கும் இடத்தில் புதுச்சேரி ரெட் கிராஸ் சங்கம் மூலம் வெள்ள நிவாரணமாக சமையல் பாத்திரங்கள், சமையல் பொருட்கள் மற்றும் அத்தியாவசியம் பொருட்கள் அனைத்தையும் வழங்கினார். மேலும் அப்பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்களின் வீடுகள் மழையினால் சேதமடைந்து இடிந்து உள்ளது. இதனை விரைவில் சரி செய்து தரப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும் நரிக்குறவர்களின் குறைகளை கேட்டறிந்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், அப்பகுதியில் உள்ள நரிக்குறவர் மக்களுக்கு சுகாதாரம் பொது போக்குவரத்து மற்றும் வேலை வாய்ப்பு ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவித்தார். தற்போது புதுச்சேரியில் வீடு தேடி சென்று கொரோன தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு முகாம் ஆனது கருவடிக்குப்பம் நரிக்குறவர் சமுதாய மக்கள் வசிக்கும் இடத்தில் கொரோனா தடுப்பு சிறப்பு முகாம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.