புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய குழுவினர் இரண்டு குழுக்களாக பிரிந்து இரண்டாம் நாளாக இன்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பெண்கள் அதிகாரிகளிடம் கண்ணீருடன் முறையிட்டனர்.
புதுச்சேரியில் கடந்த நவம்பர் 30ம் தேதி ஃபெஞ்சல் புயல் காரணமாக ஒரே நாளில் 48.4 செமீ மழை பெய்தது. இதன் காரணமாக புதுச்சேரி முழுவதும் வெள்ளக்கா மாறியது. சாத்தனூர் மற்றும் வீடூர் அணைகளின் உபரிநீர் திறப்பால், புதுச்சேரி பகுதி தென் பெண்ணையாறு, சங்கராபரணி ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஏராளமான கிராமங்கள் நீரில் மூழ்கின பொதுமக்கள் அவதிகுள்ளகினர். பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
நீரில் முழ்கி பயிர்கள் கடும் சேதத்துக்கு உள்ளானது. புதுச்சேரியில் கனமழைக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மழை வெள்ள பாதிப்புகளை மத்திய குழுவினர் வெள்ளிக்கிழமை விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து புதுச்சேரிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர். உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச் செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான 7 பேர் கொண்ட மத்திய குழுவினர் பாதிப்புகளை நேரடியாக ஞாயிற்றுக் கிழமை பார்வையிட்டனர்.
ஆய்வுக்குப் பிறகு சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து பேசினர். அதைத்தொடர்ந்து ராஜ்நிவாஸில் ஆளுநர் கைலாஷ் நாதனை சந்தித்தனர். அதிகாரிகள் பாதிப்பை விளக்கினர். இரண்டாம் நாளாக இன்று மத்திய குழுவினர் இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஒரு பிரிவினர் வில்லியனூர் பகுதியிலும் மற்றொரு குழுவினர் நகரப் பகுதி, காலாப்பட்டிலும் ஆய்வு மேற்கொண்டனர். பிள்ளைச் சாவடியில் ஆய்வின்போது மத்திய குழுவினர் சேதத்தின் பாதிப்பை முழுமையாக தங்களால் உணர முடிகிறது என தெரிவித்தனர். தொடர்ந்து மத்திய குழுவினர் மீன்வளத்துறை அதிகாரிகளிடம், மீனவர்களுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கேட்டார். அவற்றை அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது மத்திய குழுவினர், மத்திய அரசில் மேலும் பல திட்டங்கள் உள்ளது, அவற்றையும் செயல்படுத்துங்கள் என தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து மத்திய குழுவினர் கிருஷ்ணா நகர், எழில் நகர், வெங்கட்டா நகர் ஆகிய பகுதிகளை பார்வையிட்டனர். கிருஷ்ணா நகரில் வரைப்படத்தை காண்பித்து அதிகாரிகள் வெள்ளம் சூழ்ந்தது குறித்து விளக்கினர். அப்பகுதியை சேர்ந்த மக்கள், வரைப்படத்தை விட்டுவிட்டு, நேரில் வந்து பார்வையிடும்படி அழைப்பு விடுத்தனர். மேலும், அப்பகுதியில் மழை வெள்ள 5 அடிக்கும் மேல் சென்றால், 2 ஆயிரத்து 500 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால், வீடுகளில் இருந்த அனைத்து உபயோக பொருட்கள், மின்சாதன பொருட்கள் நாசமாகியுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் சுமார் ஒரு லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை பொருட்கள் சேதமாகியுள்ளது. அரசு ரூ.5 ஆயிரம் மட்டுமே நிவாரணமாக அறிவித்துள்ளது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு கூடுதலாக உரிய நிவாரணம் கிடைக்க செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பொதுமக்களின் புகார்களை அதிகாரிகள் குறித்துக் கொண்டனர். காட்டேரிக்குப்பம் சென்றனர். அங்கு அமைச்சர் நமச்சிவாயம் பாதிக்கப்பட்ட பகுதிகளை காண்பித்தார். பின்னர் சுத்துக்கேணியில் வயல்களில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக குறைகளை விவசாயிகளிடம் கேட்டனர்.
தொடர்ந்து சந்தை புதுகுப்பம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ள பகுதிகளை பார்த்தனர். ஒரு வீட்டை மட்டும் பார்த்து விட்டு மத்தியக்குழு புறப்பட்டது. எங்கள் வீடுகளுக்கும் வந்து பார்க்க வேண்டும் என்று அப்பகுதியினர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மத்திய குழுவினர் ஆய்வின்போது பெண்கள் வெள்ளத்தால் தங்கள் பாதிப்புகளை கண்ணீருடன் முறையிட்டனர். அவர்களை சமாதானம் செய்த மத்தியக்குழு அங்கிருந்து புறப்பட்டனர். பின்னர் கொடாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வுக்குழுவினர் பார்வையிட்டனர். மழையால் மருத்துவ பரிசோதனை சாதனங்கள் சேதம் அடைந்ததை கண்டனர். பின்னர் சுற்றுச்சுவர் இடிந்ததை பார்த்து விட்டு புறப்பட்டனர்.
செட்டிப்பட்டு பகுதியில் மரம் டிரான்பார்மரில் விழுந்து மின் இணைப்பு பாதிக்கப்பட்டதை அறிந்தனர். பின்னர் மழையால் கால்நடைகள் மின்சாரம் தாக்கி உயிரிழந்த போட்டோக்களை பார்த்தனர். மழைக்கு பிறகு நோய் தாக்கி இறந்த கால்நடைகளுக்கு நிவாரணம் தேவை என போட்டாவை காண்பித்து விவசாயிகள் முறையிட்டனர். அதைத்தொடர்ந்து மத்தியக் குழு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, புதுச்சேரியில் வெள்ள பாதிப்பு அதிகளவில் உள்ளது. மத்திய அரசிடம் அறிக்கை சமர்பிப்போம். அதையடுத்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என தெரிவித்து சென்றனர்.