செல்லிப்பட்டு படுகை அணையில் நடுப்பகுதியிலும், ஏற்கெனவே உடைந்த பகுதியிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அணை உடையும் அபாயமும் அதிகரித்துள்ளதற்கு பொதுப்பணித்துறை அலட்சியம்தான் காரணம் என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புதுச்சேரி அடுத்த செல்லிப்பட்டு பிள்ளையார் குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே 1906 ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சியில் படுகை அணை கட்டப்பட்டது. உரிய பராமரிப்பு இல்லாததால் கடந்த 2016 ஆம் ஆண்டு பெய்த மழையால் படுகை அணையின் நடுப்பகுதி மற்றும் கீழ்தளம் முற்றிலும் சேதமடைந்தது. அவ்வப்போது மழைக் காலங் களில் பொதுப்பணித்துறை மூலம் தற்காலிகமாக மணல் மூட்டைகள் அடுக்கி உடைப்பு சரி செய்யப்படும்.
சேதமடைந்து காணப்படும் பிரஞ்சுக்காரர்கள் கட்டிய செல்லிப்பட்டு அணை - மழைநீர் கடலில் கலப்பதால் வேதனை
இதற்கு பல லட்சங்களை பொதுப் பணித்துறை செலவிடும். கடந்தாண்டு டிசம்பரில் செல்லிப்பட்டு படுகை அணையில் தண்ணீர் வழிந்தோடியதால் திடீர் சுற்றுலா தலமாக மாறியது. ஏராளமான மக்கள் குவியத்தொடங்கினர். அதை தொடர்ந்து பெய்த தொடர் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக படுகை அணையில் மேலும்ஒரு பகுதியில் உடைப்பு ஏற்பட்டது.
பல ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி கடலில் கலப்பதால் படுகை அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து பொதுப் பணித்துறையினர் இந்த அணையை பார்வையிட்டு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் வீடுர் அணையில் தண்ணீர் திறந்து விட்டது ஒருபுறம், மழைநீர் வரத்து மறுபுறம் என வெள்ளம் பெருக்கெடுத்து உள்ளதால் செல்லிப்பட்டு படுகை அணையில் நடுப்பகுதியிலும், ஏற்கெனவே உடைந்த பகுதியிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், நூறாண்டு பழமையான செல்லிப்பட்டு படுகை அணை சேதமடைந்து பல ஆண்டுகளாகிவிட்டது. இந்த அணையை சீர் செய்து தர செல்லிப்பட்டு, பிள்ளையார் குப்பம் உட்பட இருபது கிராமத்தினர் அரசிடம் மனு அளித்தோம். ஆனால் அந்த மனுவை கிடப்பில் போட்டுவிட்டனர். மழை காலங்களில் தற்காலிகமாக மணல் மூட்டை அடுக்குகிறார்கள். தற்போது அணையில் மேலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. 20 கிராமங்களின் விவசாயம், குடிநீர் தேவைக்கு கடும் பாதிப்பு உருவாக வெள்ளத்தினால் அணை இருக்குமா என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அலட்சியம்தான் இந்நிலைக்கு காரணம் என்று குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்