காரைக்கால் பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றும் காலையில் இருந்தே மழை தூறிக் கொண்டே இருந்தது. மாலை 3 மணிக்கு பிறகு பலத்த மழையாக உருவெடுத்தது. வெளுத்து வாங்கிய மழையால் பாரதியார் சாலை, காமராஜர் சாலை, பி.கே.சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி ஊர்ந்து சென்றன. தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான சாலைகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.




இந்த நிலையில் கடலோர மீனவ கிராமங்களான நெடுங்காடு, திருநள்ளாறு மற்றும் நகர் பகுதிகளுக்கு அதிகாரிகளுடன் சென்று மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா பார்வையிட்டார். காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிகரிகாபட்டும் மழை பாதிப்பை ஆய்வு செய்தார். வயல் வெளிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது. மீனவர்கள இன்று  3ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை. காரைக்காலில் காலை 8.30 மணி மாலை 8.30 மணி வரை ஒரேநாளில் 21 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.




கடலோர மாவட்டமான கரைக்காலில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீனவளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடலுக்குள் மீன் பிடிக்க சென்றவர்களும் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டது. அதன் பேரில் கடந்த 5ஆம் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற சுமார் 250க்கு மேற்பட்ட விசைப்படகு மற்றும் 100க்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் சுமார் 5 ஆயிரம் பேர் கடந்த 2 நாட்களாக கரை திரும்பி வருகின்றனர்.




காரைக்கால் மீன்பிடி துறைமுகத்துக்கு கரை திரும்ப முடியாமல் வெகு தூரத்தில் உள்ள மீனவர்கள் அருகில் உள்ள சென்னை, ஜெகதாபட்டினம், வேதாரண்யம், நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு கரை திரும்பி விட்டதாக மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் தெரிவித்தனர். தொடர் மழை காரணமாக குறைந்த தூரம் சென்று பைபர் படகில் மீன்பிடிக்கும் மீனவர்களும் கடலுக்குள் செல்லவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் முகத்துவாரம் வெறிச்சோடி காணப்பட்டது. கரை திரும்பிய பைபர், விசைப்படகுகள் மீன்பிடி துறைமுகம் மற்றும் அரசலாற்றங்கரையோரங்களில் பாதுகாப்பாக கட்டி வைக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர