விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில ஆண்டாக போலீசாரின் பிறந்த நாள், திருமண நாளின்போது வான்செய்தி மூலமாக வாழ்த்து தெரிவிக்கப்பட்டு வருகிற போதிலும் நேரடியாக அவரவர் வீடுகளுக்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பப்படாமல் இருந்தது. அதுமட்டுமின்றி பிறந்த நாள், திருமண நாள் கொண்டாடும் போலீசார்களில் சிலருக்கு கட்டாய விடுமுறையும் அளிக்கப்படாமல் இருந்து வந்தது.  


இந்நிலையில், தற்போது புதியதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.சசாங்சாய், போலீசாருக்கு பிறந்த நாள் மற்றும் திருமண நாளில் கட்டாயம் விடுமுறை அளிக்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு போலீசாருக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. பிறந்த நாளிலோ அல்லது திருமண நாளிலோ குடும்பத்தினருடன் நாள் முழுவதையும் செலவிட வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொரு காவல்துறையினருக்கும் இந்த அறிவிப்பு இன்ப அதிர்ச்சியாக உள்ளது. மேலும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் கொண்டாடும் போலீசாருக்கு அன்றைய தினத்தில் தனது கையெழுத்திட்ட பிறந்த நாள் வாழ்த்து அட்டை மற்றும் திருமண நாள் வாழ்த்து அட்டையையும் 2 நாட்களுக்கு முன்பாகவே அவரவர்களுக்கு நேரடியாக கிடைக்கும் வகையில் வீட்டின் முகவரிக்கு பரிசாக அனுப்பி வருகிறார். போலீசாருக்கு முக்கியமான நாட்களில் தங்களது குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் இருப்பதே பெரும் மனக்குறையாக இருந்து வரும் நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த நடவடிக்கை, போலீசாருக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.


அதேபோல் பிறந்த நாள், திருமண நாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு மற்ற போலீசார் அனைவரும் வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்றும் எஸ்பி கோ.சசாங்சாய் தெரிவித்துள்ளார். அதோடு போலீசாரை உற்சாகப்படுத்தும் வகையில் முக்கிய நிகழ்வுகளில் குற்றவாளிகளை கைது செய்யும் போலீசாரை நேரில் வரவழைத்து வெகுமதி வழங்கியும் பாராட்டி வருகிறார். மேலும் முதல்நிலை காவலர் முதல் தலைமை காவலர் வரை பணியாற்றி வரும் அனைத்து போலீசாருக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை கட்டாயமாக அளிக்க வேண்டும் என்றும், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் நிலையில் பணியாற்றி வருபவர்களுக்கு 2 வாரத்திற்கு ஒருமுறை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்றும், இந்த நடைமுறையை சரிவர பின்பற்ற வேண்டும் என்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாவட்ட எஸ்பி இந்த நடவடிக்கை, அனைத்து போலீசாருக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.