இந்தியக் குடியரசுத் தலைவராக திரௌபதி முர்மு பதவியேற்ற பிறகு தற்போது முதல் முறையாக புதுச்சேரி மாநிலத்தில் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இன்று மற்றும் நாளை புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் புதுச்சேரி விமான நிலையம் வந்தடைந்தார். அதனை தொடர்ந்து அவருக்கு ஆளுநர் தமிழிசை மற்றும் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அங்கிருந்து காரில் ஜிப்மர் மருத்துவமனை வந்தடைந்தார்.
மேலும் ஜிப்மர் மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அதிநவீன கதிரியக்க சிகிச்சை உபகரணத்தைத் திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் வில்லியனூரில் 50 படுக்கைகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள ஆயுஷ் மருத்துவமனையை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, “புதுச்சேரியிக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இங்கு வசித்தவர்கள் சுதந்திர போராட்டத்தின்போது இந்திய மக்களோடு சமமாக செயல்பட்டனர். சிறந்த எழுத்தாளர்கள், சுதந்திர போராட்ட வீரர்களின் தாயகமாக புதுச்சேரி திகழ்கிறது. ஆளுநர் தமிழிசை எனது தாய்மொழியில் வரவேற்றார். இந்திய மொழிகள் அனைத்தும் எனது தாய் மொழிகள் தான்” என்றார்.
மேலும், புதுச்சேரியின் அரசியல், சமூகவியல் அசாதாரணமானது என்றும் புதுச்சேரி, காரைக்கால், மாகி, ஏனாம் என 4 பகுதிகளில் கொண்ட புதுச்சேரி வேற்றுமையில் ஒற்றுமை என்ற கலாச்சார பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது எனவும் இங்குள்ள கட்டிடக்கலை, திருவிழாக்கள், வாழ்க்கை முறை பல்வேறு தாக்கங்களை பிரதிபலிக்கிறது எனவும் பிரான்ஸ், இந்தியா இடையிலான நட்பின் பாலமாக புதுச்சேரி விளங்குவதாகவும் கூறினார்.
முன்னதாக இந்த விழாவில் ஆளுநர் தமிழிசை பேச அழைக்கப்பட்டார். அப்போது ஆளுநர் தமிழிசை, அனைவருக்கும் தாய்மொழி என்றால் சிறப்பும், பெருமிதமும் இருக்கும். புதுவைக்கு வந்துள்ள குடியரசு தலைவரை அவரின் தாய்மொழியில் வரவேற்கிறேன் எனக்கூறி, பழங்குடியினர் மொழியில் குடியரசு தலைவருக்கு வரவேற்பு தெரிவித்தார். தனது தாய்மொழியில் வரவேற்பு தெரிவித்த ஆளுநருக்கு , குடியரசு தலைவர் பேசும்போது நன்றி தெரிவித்தார்.
ஆளுநர் தமிழிசை பேச்சு :
பெண்களின் சுதந்திரத்திற்கும் முன்னேற்றத்திற்கும் குடியரசு தலைவரின் வருகை வரலாற்று சிறப்பு மிக்கதாக அமைந்துள்ளது. பட்டங்கள் ஆள்வதில் பெண்கள் முன் வந்துள்ள நிலையில் சட்டத்தை ஏற்றுவதில் குடியரசு தலைவர் அமைந்தது நாட்டில் பெண்களின் முன்னேற்றத்தை உணர்த்தியுள்ளது. குடியரசு தலைவர் திரெளபதி முர்மு வாரிசாக பிறந்து பதவியை பெற்றவர் அல்ல. ஆதிவாசியாக பிறந்து ஆதிக்க சமூக பதவிக்கு வந்ததற்கு மிகுந்த உழைப்பு தேவை. புலியை புறம் கொண்டு விரட்டிய வீரத்தை குடியரசு தலைவரிடம் பார்க்கின்றேன் என புகழாரம் சூட்டினார்.’
மேலும், மாலை அருள்மிகு மணக்குள விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றார். அதன் பிறகு அங்கிருந்து புறப்பட்டு முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினைக் கிராமத்திற்குச் சென்று அங்கு நேரில் பார்வையிடுவார். அங்கிருந்து திருக்காஞ்சி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய முடிவு செய்துள்ளார். அந்த கோயிலில் நடைபெறும் மரம் நடுவிழாவிலும் கலந்துகொள்வார்.