புதுச்சேரி: புதுச்சேரி ரயில் பாதை இந்தியாவின் பழமையான ரயில் இணைப்புகளில் ஒன்றாகும், 1879-ம் ஆண்டு இந்தியாவில் பிரெஞ்சு மற்றும் ஆங்கிலேயர் ஆட்சியின் போது புதுவை ரயில்வே நிறுவனத்தால் கட்டப்பட்டது. தென்னிந்திய ரயில்வேயின் மேற்பார்வையில், புதுச்சேரி நகரையும், துறை முகத்தையும் தென்னிந்தியா வுடன் இணைக்க மற்றும் புதுச்சேரி மற்றும் விழுப்புரம் இடையே ரயில் இணைப்பு ஏற்படுத்தப்பட்டது. அப்போது பிரெஞ்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் இடையே முழுப் பகை இருந்தபோதிலும் பொருளாதார வளர்ச்சியை பெற புதுச்சேரி ரயில்வே நிலையம் கட்டமைக்கப்பட்டது.
இந்திய ரயில்வேயின் தெற்கு ரெயில்வே மண்டலத்தால் இயக்கப்படும் இந்த நிலையம் திருச்சி ரயில்வே கோட்டத்தின் கீழ் உள்ளது. கடந்த காலங்களில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் பெரிய அளவில் போக்குவரத்து இல்லை. கால் நூற்றாண்டுக்கு முன்பு வரை பாழடைந்த கட்டிடம் போல மக்கள் நடமாட்டமின்றி ரயில் நிலையம் இருந்தது. ஆனால், அதன் பிறகு மின்மயமாக்கப்பட்டு, புதிய பிளாட்பார்ம்கள் உருவாக்கப்பட்டு நாட்டின் தலைநகர் முதல் அண்டை மாநிலங்களுக்கு புதிய ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது புதுச்சேரி ரயில் நிலையத்தில் இருந்து மங்களூரு , கன்னியாகுமரி , பெங்களூரு , கொல்கத்தா , டெல்லி , புவனேஷ்வர் மற்றும் மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு தினசரி அல்லாத ரயில்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர சென்னை , விழுப்புரம் மற்றும் திருப்பதி ஆகியவற்றுடன் தினசரி ரெயில் சேவையும் உள்ளது. புதுச்சேரி ரயில்வே நிலையத்தை மாதிரி ரயில்வே நிலையமாக மாற்ற ரயில்வே துறை பணிகளை செய்து வந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் அம்ரித் பாரத் நிலைய திட்டத்தின் கீழ் 508 ரயில்வே நிலையங்கள் ரூ.25 ஆயிரம் கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. தமிழகத்தில் அரக்கோணம் சந்திப்பு, செங்கல்பட்டு சந்திப்பு, கூடுவாஞ்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி, விழுப்புரம் சந்திப்பு உள்ளிட்ட 18 ரயில்வே நிலையங்கள் ரூ. 515 கோடியில் புதுப்பிக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புதுச்சேரி ரயில் நிலையம் ரூ.93 கோடியில் நவீனமயமாக்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
ரயில் நிலையம் புதுப்பிக்கும் விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி பேச்சு
பாரத பிரதமர் 508 ரயில் நிலையங்களை மறு புனரமைப்பு செய்ய அடிக்கல் நாட்டி உள்ளார். 25 ஆயிரம் கோடியில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. ஏழை, எளிய மக்கள், வியாபாரிகள் அதிகளவில் ரயிலில் பயணம் செய்கின்றனர். ரயில் நிலையங்கள் வசதி உள்ளதாக இருக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தை பொறுத்தவரை பழமை வாய்ந்த நிலையம். பிரெஞ்சு கலாச்சாரத்தை கொண்டது. தற்போது அதிக அளவு ரயில்கள் வருகின்றது. தற்போது சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருகின்றனர். பிரதமர் ஏழை எளிய மக்கள் மீது கொண்டுள்ள அக்கறையை காட்டுகின்றது. புதுச்சேரி மீது மத்திய அரசுக்கு அக்கறை இருக்கின்றது என்பதை இது காட்டுகிறது என முதல்வர் கூறினார்.