கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தொழில் பயிற்சி நிலையம், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஏராளமாக உள்ளன. இங்குள்ள பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் ஏராளமான மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றன. மேலும் சிதம்பரம் நகரை சுற்றி உள்ள பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் நாள்தோறும் பள்ளி, கல்லூரி, ஐடிஐ பாலிடெக்னிக் என சிதம்பரம் நகருக்கு வந்து செல்கின்றனர்.
இந்த சூழலில் கல்வி பயிலும் மாணவர்களில் பெரும்பாலானோர் ஒழுங்கற்ற முறையில் லைன் கட்டிங், ஒன் சைடு, வி கட், ஸ்பைக் எனத் தலைமுடியை டிஸைன் டிஸைனாக வெட்டிக்கொண்டு வித்தியாசமான ஹேர் ஸ்டைல்களில் பள்ளிக்கு வருவதைப் பார்க்க முடிகிறது. இப்படியான சிகை அலங்காரத்தினால் மாணவர்களிடம் நல்லொழுக்கம் குறைந்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை ஏற்கெனவே அறிவுறுத்தியிருக்கிறது. இதுபோன்று முடி வளர்த்து வருவது கலாச்சாரமாக மாறி வருவதுடன், இந்த ஹேர் ஸ்டைல்கள் கேலி, கிண்டலுக்கு ஆளாகி மாணவர்களிடையே இதனால் கடும் மோதல் போக்கும் உருவாகி வருகிறது. மாணவர்களை பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எவ்வளவு கூறியும், அவர்களின் இந்த ஹேர் ஸ்டைலை மாற்ற முடியவில்லை.
இந்நிலையில், இதனை தடுக்கும் வகையில் சிதம்பரம் நகர காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் தலைமையிலான காவல்துறையினர் அதிரடியில் இறங்கினர். தொடர்ந்து ஹேர் ஸ்டைல் தொடர்பான ரோந்து பணியில் ஈடுபட்டு, அப்போது, தலை முழுவதும் அதிக முடி, சீரற்ற முறையில் சிகை அலங்காரம் வைத்திருந்த கல்லூரி, ஐடிஐ, பள்ளி மாணவர்களை சிதம்பரம் காவல்துறையினர் ரவுண்டு கட்டி பிடித்தனர். பின்னர், பேருந்து நிலையம் என்றும் பாராமல், மாணவர்கள் என்றால் இப்படித்தான் முடி வெட்டி இருக்க வேண்டும் என கூறி அவர்களுக்கு அங்கேயே முடி திருத்தம் செய்தனர். மேலும், அவர்களுக்கு கல்வி பயிலும் மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
இதில் கல்லூரி மாணவர் ஒருவர் எக்ஸாம் முடிந்து தேர்வில் வெற்றி பெற்ற பிறகு கோயிலுக்கு சென்று மொட்டை அடிக்க போறேன் சார் என்று சொன்னது காவல்துறையினர் மற்றும் அங்கிருந்த பொதுமக்கள் இடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது, மாணவர்களுக்கு காவல்துறையினர் முடி திருத்தம் செய்ததற்கு ஒரு புறம் பொதுமக்கள் பாராட்டை தெரிவித்தாலும், கடந்த ஆண்டு, வேலூர் அண்ணாசாலையிலுள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப் பள்ளியில் இப்படியான ஹேர்கட்டுடன் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சொந்தச் செலவில், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரே சிகை அலங்காரம் செய்துவிட்டார். சிகையைச் சீர்படுத்திய தலைமை ஆசிரியரின் நோக்கம் சரியானதாக இருந்தாலும், அந்த நேரத்தில் அந்தச் செயல் விமர்சனத்துள்ளாகி சர்ச்சையைக் கிளப்பியது.
அதுபோன்று இப்படியான ஹேர்ஸ்டைல்களில் மாணவர்கள் பள்ளிக்குவந்தால், சிகை அலங்காரம் செய்துவிட்ட சலூன் கடைக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டிருப்பதும் கடும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது. பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த சூழலில் சிதம்பரம் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவு பெருகுமா? அல்லது விமர்சனம் அதிகரிக்குமா ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்