விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த ஒரு பெண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மொபைல் ஆப் மூலம் ரூ.30 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். இந்த கடன் தொகையை தவணை முறையில் முழுமையாக செலுத்திவிட்ட போதிலும், மேலும் கடன் தொகையை செலுத்த வேண்டும் எனக்கேட்டு மொபைல் ஆப் நிறுவனத்தை சேர்ந்த மர்ம நபர்கள், அப்பெண்ணை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர். இதனால் அந்த பெண், வேறு வழியின்றி ரூ.3 லட்சம் வரை மொபைல் ஆப் நிறுவனத்திற்கு செலுத்திவிட்ட போதிலும் மேலும், மேலும் கடன் தொகையை செலுத்த வேண்டும் எனக்கேட்டு அவருக்கு மிரட்டல் வந்துள்ளது.
இதனிடையே கேட்ட தொகையை கொடுக்காததால் ஆத்திரமடைந்த அந்த மர்ம நபர்கள், அப்பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து அவரின் செல்போனில் இருந்த அனைத்து எண்களுக்கும் அனுப்பி வைத்துள்ளதோடு, சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பெண், இச்சம்பவம் குறித்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், ஆன்லைன் லோன் ஆப் மூலம் பணம் பெற்று அதனை திரும்ப செலுத்தி விட்டதாகவும், இருப்பினும் தன்னுடைய புகைப்படத்தை தவறாக சித்தரித்து மிரட்டியதால், மூன்றரை லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று கட்டியுள்ளதாகம், விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறையினரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை என்றும், தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் கூறினார். மேலும், தன்னுடைய புகைப்படத்தை தவறாக சித்தரித்து தனது உறவினர்கள், நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதனால் உறவினர்களும் தனக்கு உதவ முன்வரவில்லை என வேதனை தெரிவிக்கிறார்.
தொடர்ந்து மிரட்டல்கள் வருவதால் தற்கொலை செய்துக்கொள்ளப் போவதாக கூறும் அவர், தமிழக அரசு இது போன்ற ஆன்லைன் லோன் ஆப்களை தடைசெய்ய வேண்டும் என்றும் தன்னை போல் வேறு யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதால் இதனை வெளியில் சொல்வதாகக் கூறுகிறார். மேலும் தமிழக அரசு எனக்கு உதவ முன்வரவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துளளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்