விழுப்புரம்: மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டக்கூடாது, தமிழ்நாட்டுக்கான உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்க வேண்டும் மருத்துவர் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.


அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் மூன்று முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி லாபம் எடுத்திருக்க வேண்டும். ரூ.3.400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் கூறியுள்ளார். மின்வாரியத்தில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இது குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.


இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு பெரும் துரோகம் செய்துள்ளது. நீதிமன்றம் உத்தரவிற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் இடஒதுக்கீடு கொடுப்போம் என கூறிவந்த ஸ்டாலின் தற்போது இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதன் மூலம் அரசு பெரும் துரோகத்தை செய்துள்ளது. இடஒதுக்கீடு பெற பாமகவும், வன்னியர் சங்கமும் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ளது. பெரிய போராட்டத்திற்கு தயாராகி வருகிறது. போராட்டம் குறித்து முடிவெடுக்க பாமக, வன்னியர் சங்க கூட்டு கூட்டம் அடுத்த மாதம் முதல்வாரத்தில் நடைபெறவுள்ளது. அப்போது போராட்ட தேதி முறைப்படி அறிவிக்கப்படும்.


தற்போது மேட்டூர் அணைக்கு ஒரு லட்சம் கன அடிநீர் வந்துக்கொண்டு இருக்கிறது. அடுத்த மூன்று நாட்களில் மேட்டூர் அணை நிரம்பும். 1.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. காவிரி தண்ணீர் திறந்தால் குறுவை பயிருக்கு பயனுள்ளதாக இருக்கும். மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும்.


தமிழ்நாட்டில் கரும்பு சாகுபடியில் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. கரும்பு நடவு நடப்பு ஆண்டில் 3.92 லட்சம் ஏக்கராக குறைந்துள்ளது. இதே நிலை நீடித்தால் வரும் ஆண்டுகளில் சர்க்கரை ஆலைகள் மூட வேண்டிய நிலை ஏற்படும். இந்த நிலைக்கு கரும்பு டன்னுக்கான விலை குறைவாக உள்ளதே காரணம். ஒரு டன் கரும்பு உற்பத்தி செய்ய 3.500 ரூபாய் ஆகும் நிலையில் தற்கும் குறைவாக விலைகொடுக்கப்படுகிறது. கரும்பு டன் ஒன்றுக்கு ஐந்தாயிரம் வழங்க வேண்டும்.


தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் மேலான்மை குழு தேர்வு நடைபெற்று வருகிறது. பள்ளி மேலான்மை குழுவில் அனைத்து சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும். எனவே 2019ஆம் ஆண்டியில் இருந்தது போலவே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பெற்றோர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்.


மத்திய அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை என்றால் பணியை முடக்கிப் போடாமல் போதிய நிதி ஒதுக்கி குறிப்பிட்ட காலத்தில் அப்பணிகளை முடிக்கப்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு தேவையான அவசியமான, அத்தியாவசியமான வேலைகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. உரிய நிது ஒதுக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன். பட்ஜெட்டில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. வரி நாம் கூடுதலாக கொடுத்திருக்கிறோம். வரி குறைவாக செலுத்திய மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கி இருக்கிறார்கள். இப்படியான பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது. பாரபட்சம் இல்லாமல் நிதி ஒதுக்க வேண்டும்” என கேட்டுக்கொண்டார்