காரைக்காலில் நடைபெற்ற இயற்கை விவசாயிகளின் பாரம்பரிய நெல் திருவிழாவில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தார்.

 


புதுச்சேரி மாநிலத்தின் நெற்களஞ்சியமாக விளங்கிவரும் காரைக்கால் மாவட்டம் விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கிலும் இயற்கை விவசாயத்தையும் பாரம்பரிய நெல் விதைகளையும் போற்றி பாதுகாக்கும் வகையிலும் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள இயற்கை விவசாயிகள் ஒன்று இணைந்து பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் வகையில் பாரம்பரிய நெல் திருவிழா நிகழ்ச்சியை இன்று நடத்தினர்.



 

இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி சபாநாயகர் செல்வம் திருநள்ளாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பி ஆர் சிவா மற்றும் தமிழக மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர். இத் திருவிழாவில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா கிச்சடி சம்பா காட்டுயானம் கருப்பு கவுனி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நெல் ரகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இவ்வகையான நெல் மற்றும் அரிசிகள் கிடைக்கும் இடங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பாரம்பரிய காய்கறி ரகங்களும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.  பாரம்பரிய அரிசி சிறு தானிய வகைகளால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுப்பொருட்கள் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டதுடன் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தது.  நிகழ்ச்சியில் பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு சபாநாயகர் செல்வம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.