36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட், சார்பில், விழிப்புணர்வு பேரணி மற்றும் தலைக் கவசத்துடன் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையர், போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சுன்சோங்கம் ஜடக் சிரு, , மாவட்ட ஆட்சியர்  டாக்டர் சி.பழனி தலைமையில்,  கொடியசைத்து துவக்கி வைத்தார்.


அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையர், போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட கணண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில், விழுப்புரம் மாவட்டத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு, இந்த ஆண்டு 01.01.2025 முதல் 31.01.2025 வரை "தேசிய சாலைப் பாதுகாப்பு மாதம்" அனுசரிக்கப்படுகிறது.


சாலையைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் விபத்தில்லாப் பயணத்தை உறுதி செய்வது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின் முக்கிய நோக்கமாகும். அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில், பல்வேறு பகுதிகளில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி மற்றும் தூண்டு பிரசுரங்கள் மூலமாக விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதனடிப்படையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில், 36-வது தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி, போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில், விழிப்புணர்வு பேரணி மற்றும் தலைக் கவசத்துடன் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.


விழிப்புணர்வு பேரணியில், போக்குவரத்துத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) லிட்., மற்றும் போக்குவரத்து காவல் துறை சார்பில், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, தலைக்கவசம், உயிர்க்கவசம், சீட் பெல்ட் அணிவோம், மது அருந்தி வாகனம் ஓட்டாதீர், சாலை விதிகளை கடைபிடிப்போம் போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை மற்றும் போக்குவரத்துக்கழகம் சார்பில், ஓட்டுநருக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் பொதுமக்களுக்கான சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள், நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை பாதுகாப்பு வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.


விழிப்புணர்வு பேரணியானது மாவட்ட ஆட்சியர் வளாக நுழைவு வாயிலில் தொடங்கி நான்குமுனை சந்திப்பு வரையும், இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன விழிப்புணர்வு வாகனமானது இரயில்வே சந்திப்பு வரை சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்ளப்பட்டது.


தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு வரை மொத்தம் 14.28 இலட்சம் போக்குவரத்து வாகனங்களும், 3.58 கோடி போக்குவரத்து அல்லாத வாகனங்கள் என மொத்தம் 3.7 கோடி வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.


கூந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 61,904 விபத்துக்கள் நடந்துள்ளது. இதில், 18,074 நபர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த 2023-ஆம் ஆண்டை விட 1.49 சதவிகிதம் உயிரிழப்பு குறைக்கப்பட்டுள்ளது (2023-ஆம் ஆண்டு மொத்த உயிரிழப்பு 18,347).


விழுப்புரம் மாவட்டத்தில், கடந்த 2024-ஆம் ஆண்டு 2,727 விபத்துகளில் 571 நபர்கள் உயிரிழந்துள்ளார். இதில் 69 நபர்கள் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய விபத்தில் உயிரிழந்துள்ளது பதிவாகியுள்ளது.


எனவே, வாகன ஓட்டிகள் கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் இயக்கும் பொழுது சீட்பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும். இருசக்கர வாகனம் ஓட்டும்பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனத்தை பயன்படுத்தும் போது கை பேசியை பயன்படுத்த கூடாது. மதுஅருந்திவிட்டு வாகனம் இயக்கக்கூடாது. இதுமட்டுமல்லாமல், பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும். சாலைக் குறியீடுகளையும் விதிகளையும் மதித்தால் விபத்துகளை தடுத்திட முடியும் என அரசு முதன்மைச் செயலாளர்/ஆணையர், போக்குவரத்துத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கன்சோங்கம் ஜடக் சிரு தெரிவித்தார்.