செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம், சென்னை புறநகரில் அமைந்துள்ள மிகப்பெரிய நீதிமன்றங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த நீதிமன்ற வளாகத்திற்குள் 12க்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. வேலை நாட்களில் எப்பொழுதும் செங்கல்பட்டு நீதிமன்றம் பரபரப்பு உடனே காணப்படும். இந்த நிலையில் நேற்று காலை செங்கல்பட்டு ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில் அமைந்துள்ள, கடையில் டீ-குடித்து கொண்டிருந்த போது, அடையாளம் தெரியாத நபர் மீது, 3 இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத , மர்ம நபர்கள் 6 பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர் .


இதுகுறித்து , தகவலறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் ப்ரனீத் தலைமையில், நீதிமன்ற  வளாகத்தில் பதட்டத்தை தணிக்க 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்கு ஈடுபட்டனர். வெட்டுப்பட்ட நபரை, மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில், தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை முயற்சி செய்யப்பட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை செய்ததில், சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த லோகேஷ் (28) என்பதும் இவர் மீது சென்னை புறநகர் பகுதியில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. லோகேஷ் மீது கூடுவாஞ்சேரி, ஓட்டேரி, பீர்க்கங்கரணை ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது.


லோகேஷ் 2015 ஆம் ஆண்டு தனது அண்ணன், பாஸ்கி என்கிற பாஸ்கரன் மற்றும் தாம்பரம் இரும்புலியூர் பகுதியைச் சேர்ந்த பாலாஜி ஆகியோருடன் இணைந்து, கிரிக்கெட் விளையாடிய போது ஏற்பட்ட மோதலில், லோகேஷ், பாஸ்கரன் இணைந்து பாலாஜியை கொலை செய்துள்ளனர். இதனை அடுத்து 2016 ஆம் ஆண்டு பாலாஜி நண்பர்கள் சிலர், லோகேஷின், சகோதரர் பாஸ்கரை கொலை செய்துள்ளனர். தன் அண்ணனை கொலை செய்த நபர்களை பழிவாங்க பல முறை லோகேஷ் திட்டம் திட்டி உள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பு கூடுவாஞ்சேரி அருகே, அண்ணனை கொலை செய்தவர்களை கொலை செய்ய முயற்சி செய்த பொழுது அவர்கள் தப்பியுள்ளனர்.


இந்தநிலையில் , தனது சகோதரர் பாஸ்கர் கொலை வழக்கில் சாட்சி சொல்வதற்காக நேற்று  காலை தனது நண்பருடன் செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். அப்போது நீதிமன்றம் அருகே டீக்கடையில் டீ குடித்து கொண்டிருக்கும் போது, 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் லோகேஷை, நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் சரமாரியாக வெட்டியும் தப்பியோடி விட்டனர்.


லோகேஷ் தற்போது மிகவும் ஆபத்தான நிலையில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலன்னின்றி உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து செங்கல்பட்டு நகர போலீசார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் குற்றவியல் நீதிமன்றம் எண்- 1ல் ராகுல், தனசேகர், பிரவீன், லோகேஷ், அருண்குமார், ரூபேஷ், சாம்சன் ஆகிய ஏழு பேர் ஆஜராகி உள்ளனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.