இந்தியை எப்படியாவது தமிழகத்தில் புகுத்திட வேண்டும் என மனப்பால் குடித்து கொண்டிருக்கும் மோடியின் இந்தி திணிப்பு தமிழகத்தில் நிகழாது எனவும் ஒரு மொழிக்காக உயிர் நீர்த்தது தமிழர்கள் தான் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் இந்தியை தமிழகத்தில் திணிக்க முடியாது என்றும் எம்பி கெளதமசிகாமணி கூறியுள்ளார்.


திமுக இளைஞர் அணி சார்பில் விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் இந்தி திணிப்பை கண்டித்தும் ஒரே பொது நுழைவுத் தேர்வினை திரும்ப பெற வலியுறுத்தி எம்பி கெளதமசிகாமணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக எம்எல்ஏ புகழேந்தி, லட்சுமணன், உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து கூட்டத்தில் பேசிய திமுக எம் பி கெளதமசிகாமணி, இந்தியை எப்படியாவது தமிழகத்தில் புகுத்திட வேண்டும் என மனப்பால் குடித்து கொண்டிருக்கும் மோடியின் இந்தி திணிப்பு தமிழகத்தில் நிகழாது எனவும் ஒரு மொழிக்காக உயிர் நீர்த்தது தமிழர்கள் தான் எவ்வளவு பெரிய அதிகாரத்தில் இருந்தாலும் இந்தியை தமிழகத்தில் திணிக்க முடியாது எனவும் கூறினார்.


தொடர்ந்து பேசிய அவர், “பெரியார், அண்ணா, தாளமுத்து, கருணாநிதி போன்றவர்கள் பற்ற வைத்த நெருப்பு போல இன்றும் நமது தமிழர்கள் மத்தியில் இந்தியை திணிக்க முடியாத அளவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் செயல்பட்டு கொண்டிருக்கிறார். தகுதியை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக கல்வி அறிவு பெற நடவடிக்கை எடுத்தவர் தான் கருணாநிதி.  இன்று படிப்பதற்கே நுழைவு தேர்வு என்பது ஏற்க முடியாது. பாஜகாவால் தமிழகத்தில் வளர முடியவில்லை என்பதால் இந்தி திணிப்பை திணிக்க பார்க்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.


அதனை தொடர்ந்து பேசிய விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன், “தமிழர்களின் இனத்துக்கும் மொழிக்கும் பிரச்சனை என்றால் எதிர்த்து குரல் கொடுப்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின்.  எந்த ஒரு மொழிக்கும் எதிரான இயக்கம் திமுக இல்லை. ஆனால் இந்தி மொழியை திணிக்கும் போது உயிரை கொடுத்தும் போராட கூடியவர்கள் தான் திமுகவினர்” எனத் தெரிவித்தார். அப்போது  ஆர்ப்பாட்டத்தின் நடுவே  ஆம்புலன்ஸ் வருகை புரிந்ததை கண்டு சுதாரித்து கொண்ட எம்எல்ஏ லட்சுமணன் உடனடியாக வழிவிட கூறியதை தொடர்ந்து தொண்டர்கள் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்டு நின்றனர்.