விழுப்புரம் மாவட்டம்  அருங்குறிக்கை கிராமத்தில் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் பள்ளி கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் அமைச்சர் பொன்முடி பேசும் போது, தங்கள் பகுதியில் தண்ணீர் பிரச்சனை உள்ளதாக பெண்மணி ஒருவர் கேள்வி எழுப்பியதற்கு, ‘இந்த கிராமத்தில் எல்லாரும் எங்களுக்கு ஓட்டு போட்டு கிழிச்சிட்டீங்க’ என்று கூறிய அவர் அதன் பின்னர் ஓட்டு போட்டாலும் போடாவிட்டாலும் எல்லாருக்கும் செய்ய வேண்டுமென முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாக தெரிவித்தார். அமைச்சரின் பேச்சு கூட்டத்தில் இருந்தவர்கள் மத்தியில் முகம் சுழிக்க செய்தது.


உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், அருங்குறுக்கை அரசு உயர்நிலைப்பள்ளியில், கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவரினை பயன்பாட்டிற்கு இன்று (06.03.2023) திறந்து வைத்தார். 


உயர்கல்வித்துறை அமைச்சர் தெரிவிக்கையில், “தமிழ்நாடு முதலமைச்சர் அரசுப்பள்ளிகளின் தரத்தினை உயர்த்திடும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, அரசுப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், கழிப்பறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பள்ளி சுற்றுச்சுவர் போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதுடன், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி தரத்தினை உயர்த்திட வேண்டும் என்ற நோக்கில், ‘இல்லம் தேடிக் கல்வி”, ‘எண்ணும் எழுத்தும் திட்டம்”, ‘கலைத்திருவிழா”, ‘கலை அரங்கம்” போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.


அதனடிப்படையில், அருங்குறுக்கை அரசு உயர்நிலைப்பள்ளியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.37.23 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சுற்றுச்சுவர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், அருங்குறுக்கை கிராமத்தில், அடிப்படை வசதிகளான சாலை வசதி, மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, இலவச வீட்டுமனைப் பட்டா, தொகுப்பு வீடுகள், முதியோர் ஓய்வூதியத் தொகை, நூறு நாள் வேலை திட்ட பணி ஆணை போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.


மேலும், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான உயர்நிலைப்பள்ளியினை மேல்நிலைப்பள்ளியினை தரம் உயர்த்தித் தர வேண்டும் என்ற கோரிக்கையினை நிறைவேற்றிடும் விதமாக விரைவில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பயில வேண்டும் என்ற கனவினை நிறைவேற்றிடும் விதமாக7.5 சதவீத இடஒதுக்கீட்டினை செயல்படுத்தியுள்ளார்கள். இதன் மூலம், மாணவர்கள் உயர்கல்வி படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதோடு, கல்விக்கட்டணம் மற்றும் விடுதிக்கட்டணமின்றி உயர்கல்வி பயிலலாம். மேலும், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவியர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின்கீழ், மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை நல்ல முறையில் பயன்படுத்தி சிறப்பான முறையில் படித்து தேர்ச்சி பெற்றிட வேண்டும்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து, பள்ளிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்









பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண