விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்று மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் மாசி மாத அமாவாசை அன்று, மேல்மலையனூரில் நடைபெறும் மயானக்கொள்ளைத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு ஒன்று திரண்டு, மயானத்தில் கொள்ளைவிட்டு, அன்னையை மனமுருக வேண்டி அருள் பெற்றுச் செல்வார்கள். இந்த மேல்மலையனூர் தலத்தில் நான்கு கரங்களுடன், இடது காலை மடக்கி, வலது காலை தொங்கவிட்ட யோக வடிவில், பிரம்ம கபாலத்தை மிதித்தபடி, வடக்கு நோக்கி மக்களுக்கு அங்காளம்மன் காட்சி அளித்து வருவது சிறப்பாக கருதப்படுகிறது.


பார்வதிதேவி பிரம்மனின் கபாலத்தை அழித்து, சிவபெருமானுடன் இங்கு சாப விமோச்சனம் பெற்றதினால். இந்த ஆலயம் சென்று வழிபட்டால் பிரச்னைகள், சாபங்கள் தீரும் என்பது நம்பிக்கை. அம்மன் இங்கு புற்றில் பாம்பாக இருந்ததால், அவள் இன்றளவும் அவ்வாறே காட்சி தருவதாக நம்பும் பக்தர்கள் அப்புற்றினை வணங்கி, அம்மண்ணை நெற்றியில் பூசி வழிபட திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் நம்பிக்கையோடு கூறுகின்றனர்.




ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை தினத்தன்று அம்மனுக்கு நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் இங்கு சிறப்பானதாகப் பார்க்கப்படுகிறது. அன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களும், பொதுமக்களும் அம்மனின் அருள்பெற திரள்வார்கள். கொரோனா பெருந்தொற்று பரவ தொடங்கியதால் அமாவாசை ஊஞ்சல் உற்சவம் அவ்வப்போது தடைபட்டு வந்தது. அதன்படி இம்முறையும் கொரோனா தொற்றின் காரணமாகவே ஊஞ்சல் உற்சவம் தடைசெய்யப்பட்டுள்ளது.


கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி அரசின் வழிகாட்டுதல் விதிமுறைக்கு உட்பட்டு வருகின்ற 02.01.2022 (ஞயிற்றுகிழமை) அமாவாசை அன்று நடைபெற இருந்த மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. வழக்கமான தரிசனத்திற்கு மட்டுமே பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு சார்பிலும் அன்றைய தினம் சிறப்பு பேருந்துகள் ஏதும் இயக்கப்படாது எனவும் திருக்கோயில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் செயல் அலுவலர் ராமு அறிவித்துள்ளார்.