மாசி மாதம் பவுர்ணமியும், மகம் நட்சத்திரமும் இணைந்து வரும் நாள் மாசி மக திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் அன்று கடலில் நீராடினால் அவர்களின் பாவங்கள் தீர்ந்து புண்ணியம் கிடைக்கும் என மாசிமக புராணங்கள் கூறுகின்றன. அதன்படி மாசிமக விழாவான இன்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடந்தது. கடலூர், விழுப்புரம் மாவட்டம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கோவில்களில் இருந்து சாமிகளை வாகனங்களில் வைத்து வீதி உலாவாக மேளதாளம் முழங்க, தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு கொண்டு வந்தனர்.காலை 7 மணியில் இருந்தே தேவனாம்பட்டினம் சாலை வழியாக சாமிகள் வீதி உலாவாக மாசி மகத்திருவிழாவுக்கு வந்தன. பஸ்கள், வேன்கள், வாகனங்கள் அனைத்தும் சில்வர் பீச் கடற்கரைச்சாலையில் திருப்பி விடப்பட்டன.

 



 

இதையடுத்து கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு உற்சவ மூர்த்திகளுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது.தீர்த்தவாரியின் போது சாமிகளுடன் சேர்ந்து நீராடினால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால் தீர்த்தவாரியின் போது கடற்கரையில் பக்தர்கள் குளித்து சாமி தரிசனம் செய்தனர். உற்சவ மூர்த்திகளுக்கு தேங்காய், பழம் போன்ற பூஜைக்குரிய பொருட்களை வைத்து, தீபாராதனை காண்பித்து பக்தர்கள் வழிபட்டனர்.

 

மாசிமக விழாவில் திருமாணிக்குழி வாமனபுரீஸ்வரர், திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர், திருவந்திபுரம் செங்கமலத்தாயார் சமேத தேவநாதசுவாமிகள், வரதராஜ பெருமாள் வண்டிப்பாளையம் சுப்ரமணியசாமி, அங்காளம்மன், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜ பெருமாள், செல்லங்குப்பம் பொட்லாயி அம்மன், மற்றும் கடலூரை சுற்றி உள்ள கிராம பகுதிகளை சேர்ந்த சுவாமிகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தீர்த்தவாரி நடைபெற்றது.

 



 

விழாவை முன்னிட்டு கடலூர் சில்வர் பீச் கடற்கரையில் நூற்றுக்கணக்கான கடைகள் அமைக்கப்பட்டு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொம்மை, வளையல், நகை, பிளாஸ்டிக், வீட்டு உபயோக பொருட்கள் கடை, கரும்பு, அவல் பொறிகடலை, பேரீச்சம்பழம் உள்ளிட்ட ஏராளமான கடைகள் போடப்பட்டிருந்தன. கடற்கரையில் வாழைப்பழம், கரும்பு ஆகியவை ஏலம் விடப்பட்டன. மாசிமகத்தையொட்டி முன்னிட்டு மறைந்த முன்னோர்களுக்கு இன்று காலை கடற்கரையில் திதி கொடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தன.கடலூர் டிஎஸ்பி கரிகால் பாரிசங்கர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. செய்யப்பட்டிருந்தன. இன்ஸ்பெக்டர்கள், சப்இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 பேர் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

 



 

சில்வர்பீச் மற்றும் மகத்துப்பட்டறை பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கோபுரங்களில் காவல் துறையினர் மைக் மூலம் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தினர். கடற்கரையில் தீயணைப்பு படையினர், நீச்சல்வீரர்கள், மீட்புக்குழுவினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் கடலோரத்தில் படகுகள் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து இன்று இரவு கடலூர் துறைமுகம் உப்பனாற்றில் சாமிகளின் தெப்பல் உற்சவம் நடைபெறும்.