கடலூர் மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நேற்று இரவு திருப்பாதிரிப்புலியூர் தேரடி தெருவில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி, வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது,கடந்த காலங்களில் முதல்-அமைச்சர்கள் உள்ளாட்சி தேர்தல் பரப்புரையின் போது வெளியே வந்து பேசுவார்கள். ஆனால் இந்த முறை முதல்-அமைச்சர் களத்திற்கே வராமல், காணொலி மூலம் ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார், மேலும் கடந்த 8 மாத கால ஆட்சியில் திமுக மக்களின் கோபத்தையும், சாபத்தையும் சம்பாதித்துள்ளது.

 



 

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஓட்டுக்காக தமிழகத்தில் கிராமம் கிராமமாக சென்று, கிராம சபை கூட்டங்கள் நடத்தினார். அதில் மக்களிடம் இருந்து பெட்டி பெட்டியாக மனுக்களை பெற்றுச் சென்றார். அப்போது ஆட்சிக்கு வந்த உடனே 100 நாட்களில் அனைத்து மனுக்களுக்கும் தீர்வு காணப்படும் என்றார், ஆனால் ஆட்சிக்கு வந்து 8 மாதமாகியும் மனுக்களுக்கு தீர்வு காணவில்லை. கிராம சபை கூட்டங்களையும் நடத்தாமல் ரத்து செய்து விட்டார். மேலும் சட்டமன்ற தேர்தலின்போது 517 வாக்குறுதிகளை கொடுத்தார். அதில் 7 வாக்குறுதிகளை கூட நிறைவேற்ற முடியாத விடியாத அரசாக திமுக உள்ளது, அத்நால் தான் என்னவோ முதல்-அமைச்சர் மக்களை பார்த்து பேச பயந்து, காணொலி மூலமாக பிரசாரம் செய்கிறார்.  தற்போது ஆட்சியில் இருப்பதால், தங்கள் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யாவிட்டால் எந்தவொரு நலத்திட்டங்களையும் செய்ய மாட்டோம் என்று திமுக வினர் மிரட்டி வருகின்றனர். மேலும் பொங்கலுக்கு கொடுத்த 21 தொகுப்பு பொருட்களில் கரும்பு வாங்கியதில் ரூ.33 கோடியும், மஞ்சள் பை வாங்கியதில் ரூ.130 கோடியும் ஊழல் செய்துள்ளது.

 



 

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டது. திமுக வின் மாவட்ட செயலாளர்கள் காவல்துறையை கையில் வைத்துக் கொண்டு கட்டப் பஞ்சாயத்து செய்ய தொடங்கி விட்டனர். மேலும் டெல்லியில் ஒரு சமூகநீதி, தமிழகத்தில் ஒரு சமூகநீதி என்று பேசி வருபவர் தான் தொல்.திருமாவளவன், 75 ஆண்டுகளாக அருந்ததியர் மக்களுக்கு வழங்கப்படாத மந்திரி பதவியை எல்.முருகனுக்கு வழங்கி சமூகநீதியை நிலைநாட்டியவர் பிரதமர் மோடி.

 



 

திமுக வின் 8 மாதகால ஆட்சியில் சாதனை என்பதே இல்லை. தங்கள் சாதனையை சொல்லி, ஓட்டு கூட பெற முடியாத நிலையில்தான் ஆளுங்கட்சி இருக்கிறது. தமிழகத்திற்கு தேவை மாற்றம். தமிழகத்தில் பா.ஜ.க.வால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியும். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே 12 பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். பா.ஜ.க.வால் தமிழகத்தில் மாற்றம் தொடங்கி விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.