புதுச்சேரி மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன்  இன்று (19-07-2023) செய்தியாளர்களிடம் கூறியதாவது:


அரசியல் காழ்புணர்ச்சி:


தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அரசு பள்ளியில் படிக்கும் ஏழை, எளிய மாணவர்களின் நலனுக்காக மருத்துவ கல்வியில் அரசின் இட ஒதுக்கீட்டில் அப்போதைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி  அவர்கள் ஏழரை சதவீதம் உள் ஒதுக்கீட்டினை கொண்டு வந்தார். அந்த சட்டத்தை புதுச்சேரியிலும் கொண்டு வர வேண்டும் என கடந்த காங்கிரஸ், திமுக ஆட்சியின் போது அதிமுக சார்பில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தினோம். அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவித்து விட்டு அரசியல் காழ்புணர்ச்சி காரணமாக நடைமுறைபடுத்தாமல் விட்டனர்.


10 சதவீத இடஒதுக்கீடு:


இப்போது அதிமுகவினர் பலகட்ட கோரிக்கைகளை அரசுக்கு வைத்ததை தொடர்ந்து நேற்று அரசு பள்ளி மாணவர்களின் நலனுக்காக சட்டமன்றம் முற்றுகை போராட்டத்தை அதிமுக சார்பில் நடத்தினோம். போராட்டம் நடந்த சில மணி நேரத்தில் ஆளுநர் தமிழிசை புதுச்சேரியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என அரசுக்கு பரிந்துரை செய்கிறேன் என அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர் மற்றும் 10 சதவீதம் ஒதுக்கீட்டை அமல்படுத்தும் முதலமைச்சருக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துகொள்கிறேன். ஆளுநரின் இந்த பரிந்துரை வெறும் அறிவிப்பாக இல்லாமல் உடனடியாக அமைச்சரவையை முதலமைச்சர் கூட்டி ஒன்று, இரண்டு தினங்ளுக்குள் அவசர சட்டமன்றத்தை கூட்டி 10 சதவீத இடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பாக நடவடிக்கையை உடனடியான எடுக்க வேண்டும்.


ஆளுநர் அவர்கள் நேற்று வெளியிட்ட கருத்தில் இந்த ஆண்டே மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடங்களை ஒதுக்க அரசு உரிய வழிவகை செய்ய வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் அரசு எடுக்க வேண்டும். ஏற்கனவே பிராந்திய ரீதியில் மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் உள்ஒதுக்கீடு பெறக்கூடிய பிராந்தியங்களுக்கு இந்த உள் ஒதுக்கீட்டை வழங்காமல் புதுச்சேரி பிராந்தியத்திற்கு மட்டும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உள் ஒதுக்கீட்டினை அரசு வழங்க முன்வர வேண்டும்.


ஒரே திட்டத்தில் இரண்டு விதத்தில் உள்ஒதுக்கீட்டில் பயன்பெற கூடாது என்ற எண்ணத்தில் இதை அதிமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம். ஏற்கனவே காரைக்கால 18%, ஏனாம் 3%, மாஹோ 4% பெற்று வருகின்றனர்.  இந்த பிரச்சனையில எந்தவித இடற்பாடும் ஏற்படாத வகையில் ஏற்கனவே உள்ஒதுக்கீடு பெறாத புதுச்சேரி பிராந்தியத்திற்கு மட்டும் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களின் 10 சதவீதம் உள்ஒதுக்கீடு பெற சட்டத்தை வகுக்க வேண்டும். ஏற்கனவே கடந்த ஆட்சியில் அதிமுக கொண்டுவந்த கவனஈர்ப்பு தீர்மானத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையே அமல்படுத்தலாம்.


மாறுபட்ட கொள்கை முடிவு:


மாறுபட்ட கொள்கை முடிவுகளை கொண்ட காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 கட்சிகள் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க புதிய கூட்டணியை அமைத்துள்ளனர். அந்த கூட்டணிக்கு இந்தியா என்று பெயர் வைத்துள்ளனர். இந்தியா என்று பெயர் வைக்கும் போது பல்வேறு தர்ம சங்கடங்களை வாக்காளர்களுக்கு ஏற்படும். எனவே இதனை தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும்.


இதற்கு இந்திய தேசிய வளர்ச்சி உள்ளடக்கிய கூட்டணி என்று பொருள். மதச்சார்பற்ற கட்சிகள் என்று இவர்கள் பரைசாற்றிக்கொண்டனர். இந்த கூட்டணியில் மதச்சார்பு என்ற பெயரே இல்லை. எனவே இவர்கள் மதச்சார்பற்ற கட்சிகள் என்று ஏற்கனவே கூறி வந்தது போலீயான வேஷம். மதச்சார்பை கைவிட்டு விட்டார்கள் என்பதை இஸ்லாமியர்கள், கிறிஸ்துவ மக்கள் புரிந்து கொண்டு தேச ஒற்றுமைக்கு வழி வகுக்கும் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் அமையும் எங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். வரும் நாடாளுமன்ற தேர்தில் புதுச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் எடப்பாடி பழனிசாமி  தலைமையில் அமையும் எங்களது கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும். போலி மத்சார்பின்மை பேசும் கட்சிகளுக்கு மக்கள் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.


தமிழகத்தில் அமைச்சரவையில் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 10 தினங்களுக்குள் பல அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள். எனவே வருங்காலத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சரவை கூட்டத்தை புழல் சிறையில் தான் நடத்துவார் என தெரிகிறது. தமிழக திமுக ஆட்சியின் மீது மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.