விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், உரிமைத்தொகை குறித்த குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள் மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கிக்கணக்கில் பணம் கிடைக்கப்பெறாதவர்களுக்கான அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,


விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்துள்ள பெரும்பான்மையான பயனாளிகளுக்கு உரிமைத்தொகை ரூ.1,000/- அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. உரிமைத்தொகை குறித்த குறுஞ்செய்தி வரப்பெறாதவர்கள் மற்றும் குறுஞ்செய்தி வரப்பெற்று வங்கிக்கணக்கில் பணம் வரவில்லை என தெரிவிப்பவர்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் ஆதார் பதிவு செய்துள்ள கைப்பேசி ஆகியவற்றுடன் 19.09.2023 முதல் அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


 விழுப்புரம் மாவட்டத்தில் 1,108 இ-சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. மேலும் விண்ணப்பங்கள் குறித்த தகவல் பெறுவதற்கு, உதவி மையம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களில் 38 மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண் 04146-1077 , 04146-223265 என்ற தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு தகுதியிருந்தும் நிராகரிக்கப்பட்டிருப்பதாக கருதினால் இ-சேவை மையத்திலேயே மேல்முறையீடு செய்து கொள்ளலாம் இதற்காக கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை. தகுதியான மேல்முறையீட்டு மனுக்களுக்கு தமிழக அரசே சேவை மையக்கட்டணமாக ரூ.10, இ-சேவை மையத்திற்கு செலுத்திவிடும். இ-சேவை மையங்கள் மூலமாக பெறப்படும் மேல்முறையீட்டு மனுக்கள் வருவாய் கோட்டாட்சியர், சார் ஆட்சியர் ஆகியோரால் 30 நாட்களுக்குள்ளாக தீர்வு காணப்பட்டு தகுதியிருப்பின் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதனடிப்படையில், இன்றைய தினம் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ், அமைக்கப்பட்டுள்ள உதவி மையத்தினை பார்வையிட்டு, விண்ணப்பதாரர்களிடம் விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்டறியப்பட்டது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.


 


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை:


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் வரும் 15-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. அன்றைய தினமே தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி பயனாளர்களுக்கும் அவர்களது வங்கிக் கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்கப்பட வேண்டும் என்று முதலமைச்சர் ,மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, தகுதியான பயனாளர்களை திட்டத்தில் இணைப்பதற்கான பணிகள் அரசு சார்பில் வேகமாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட முகாம் ஜுலை 24ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாம் ஆகஸ்ட் 5ம் தேதி முதல் 14 தேதி வரை நடைபெற்றது. இந்த முகாம்களின் மூலம் மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் திட்டத்தில் இணைய 1.54 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.


மாதம்தோறும் உரிமைத் தொகை, குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். வங்கி கணக்கு இல்லாத பயனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கி அல்லது கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு தொடங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  குடும்பத் தலைவிகளுக்கு ரூபே ஏடிஎம் கார்டு வழங்கப்பட உள்ளது.  இந்த கார்டு மூலம் உரிமைத் தொகை பணத்தை குடும்பத் தலைவிகள் எடுத்துக் கொள்ள முடியும். ஏடிஎம் கார்டுகளை ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்க அரசு திட்டமிட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் மாதம்தோறும் 1-ம் தேதி உரிமை தொகை வங்கி கணக்குக்கு செல்லும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே, இத்திட்டத்தில் தகுதியான பயனாளர்களின் எண்ணிக்கை 1 கோடிக்கும் அதிகமாக உள்ள நிலையில் இறுதிக்கட்ட ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்  நடைபெற்றது. 


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிப்பு


கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலினை செய்ததில்  57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப் பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் தரப்பில், சம்பந்தப்பட்ட மகளிருக்கு அதிகாரப்பூர்வமாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் கொடுக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. அந்த விளக்கத்தில் ஏதேனும் குறைகள் இருந்தால் மீண்டும் மனு செய்து தகுதியுடையவர்களாக மாற்றிக் கொள்ளலாம் என்றும், தகுதியுடைய ஒரு பயனாளி கூட விடுபட்டுவிடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.