விழுப்புரம்: மரக்காணம் அருகே விநாயகர் சிலை வைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, இருதரப்பினரும் சிலை வைக்க தடை விதித்து மரக்காணம் வட்டாட்சியர் அதிரடி உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கூனிமேடு கிராமத்தில் அம்பேத்கர் பேருந்து நிலையம் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று ஒரு தரப்பை சேர்ந்த மக்கள் விநாயகர் சிலை வைப்பதற்காக முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வந்தபோது விநாயகர் சிலை வைப்பதற்கு மற்றொரு தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்து வந்தனர். இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. இதனையடுத்து அப்பகுதியில் மரக்காணம் போலீசார் மற்றும் விழுப்புரம் மாவட்ட குற்ற ஆவண பதிவு கூட காவல்துணை கண்காணிப்பாளர் உமாசங்கர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இரு தரப்பினரும் சிலை வைக்க அமைத்திருந்த கொட்டகை ஆகியவற்றை வருவாய்த்துறையினர் மற்றும் காவல்துறையினர் அகற்றினர். இந்த நிலையில் நேற்று காலை மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் மரக்காணம் தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பினரின் ஒன்றிணைத்து அமைதி கூட்டம் நடைபெற்றது. இந்த அமைதி கூட்டத்தில் சுமுக பேச்சு வார்த்தை எட்டபடாதாதன் காரணமாக பிரச்சனை நடைபெறும் இடம் கிழக்கு சாலையில் சாலைக்கு அருகாமையில் உள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் எனவும் சிலை வைக்கும் இடத்திற்கு மேல் பகுதியில் மின்சார கம்பிகள் செல்வதன் காரணமாகவும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருப்பதற்கு இருதரப்பினரும் கூனிமேடு கிராம கிழக்கு கடற்கரை சாலையில் விநாயகர் சிலை வைக்க தடை விதித்து மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன் உத்தரவிட்டார். மேலும் அடுத்த 15 நாட்களுக்கு பின்பு மீண்டும் அமைதி கூட்டம் நடைபெறும் என மரக்காணம் வட்டாட்சியர் பாலமுருகன் தெரிவித்துள்ளார்.