தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேதி அறிவிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இதில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் மொத்தமாக எடுத்து வரப்படும் என பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தேர்தல் பறக்கும் படை 3ஆவது மண்டல துணை வட்டாட்சியர் ஜெயச்சந்திரன் மற்றும் மங்கலம்பேட்டை சிறப்பு உதவி ஆய்வாளர் புருஷோத்தமன் ஆகியோர் தலைமையிலான பறக்கும் படையினர் பெண்ணாடம் அடுத்த இறையூரில் உள்ள தனியார் பள்ளி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திட்டக்குடியில் இருந்து விருத்தாசலத்திற்கு மளிகை பொருட்கள் மொத்த வியபார பாக்கியை வசூல் செய்து கொண்டு விருத்தாச்சலம் அருகே உள்ள கார்கூடல் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ்(41) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்த போது அவரிடம் சோதனை செய்ததில், அவர் திட்டக்குடி மற்றும் ஆவினங்குடி பகுதியில் இருந்து 17 லட்சத்து 55 ஆயிரத்து 60 ரூபாய் பணத்தை கொண்டு வந்து உள்ளார்.மேலும் அவர் கொண்டு வந்த 17 லட்சத்து 55 ஆயிரத்து 60 ரூபாய் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாததால் அவரிடம் இருந்து பணத்தையும் இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து பெண்ணாடம் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகவேலிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதனை தொடர்ந்து பெண்ணாடம் வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் விருத்தாசலம் தாலுகா மாத்தூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தசாமி மகன் அரவிந்த்(27) என்றும் விருதாச்சலத்தில் இருந்து பெண்ணாடம், திட்டக்குடி உள்ளிட்ட இப்பகுதியில் உள்ள தனியார் ஏடிஎம் மையத்திற்கு பணம் நிரப்ப செல்வதாக கூறி உள்ளார் இருப்பினும் எடுத்து வந்த 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கு எந்த வித ஆவணங்களும் இல்லாததால் பறக்கும் படையினர் 1லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்து அதனையும் பெண்ணாடம் பேரூராட்சி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முகவேலிடம் ஒப்படைத்தனர்.மேலும் ஒரே நேரத்தில் அடுத்து அடுத்து மொத்தமாக 19 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் இருசக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்டு தேர்தல் பறக்கும் படையினரால் பிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.