விழுப்புரம் மாவட்டடம் திண்டிவனம் அருகே இளமங்கலத்தில் பவுத்த கோயில் குறித்த செய்தியைக் கூறும் அரிய வகை கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் வரலாற்று ஆய்வாளர் ராஜ்பன்னீர் செல்வம். இவர், விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வல்லம் பகுதியில் கள ஆ ய்வு மேற்கொண்டார். அப்போது, வல்லம் ஊராட்சிக்குட்பட்ட இளமங்கலம் கிராமத்தில் 30 அடி உயரமுள்ள தட்டை பாறையின் மீது சமீபத்தில் கட்டப்பட்டுள்ள பிள்ளையார் கோவில் படிக்கட்டு அருகே 10 அடி உயரமுள்ள சதுர பலகை கல்லில் சக்கரத்துடன் கூடிய 11 வரி கல்வெட்டை கண்டுபிடித்தார்.


இதுகுறித்து ராஜ்பன்னீர்செல்வம் கூறியதாவது:




ஸ்ரீ கோவிசைய என தொடங்கும் இந்த கல்வெட்டு இரண்டாம் நந்திவர்மனின் 14ஆவது ஆட்சி ஆண்டு கல்வெட்டாகும். கி.பி.745 ஆம் ஆண்டு சிங்கபுரி நாட்டு கீழ்வழி இளமங்கலத்தில் உள்ள திருவடிகளுக்கு கற்றினி எடுப்பித்து, அத்தனிக்கு நந்தவனம் செய்து தந்ததாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதனை அருவாரையர் காட்டிகன் மகன் கல்லறையோன் என்பவர் செய்ததாகவும், இத்தருமத்தை காப்பவர்களின் பாதத்தை தன் முடிமேல் வைத்து தாங்குவேன் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டில் உள்ள சக்கரம் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள சாஞ்சியில் இருக்கும் புத்த ஸ்துாபியில் உள்ள தர்மசக்கரத்தை ஒத்து உள்ளதோடு, இதே போன்ற சக்கர ஸ்துாபி இவ்வூரிலிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள தேசூரிலும், சென்னை அடுத்த திருவிற்கோலத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில், இதுவரை பவுத்தம் சார்ந்து புத்தர் சிலை தர்மசக்கரம் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பவுத்த கோவில் எழுப்பியதற்கான சான்றாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள முதல் கல்வெட்டாகும். மேலும், இந்த ஊரை சேர்ந்த மணிகண்டன் அளித்த தகவலின் பேரில், தர்மகர்த்தா சாமி என்ற பெயரில் தவ்வை சிற்பம் ஒரு வீட்டின் பின்புறம் வழிபாட்டில் உள்ளது. மாந்தன், மாந்தியுடன் காணப்படும் இச்சிற்பத்தில் தவ்வையின் தலைக்கு மேல் குடை காட்டப்பட்டுள்ளது. இச்சிற்ப அமைதியை வைத்து இதன் மூலம் 8ம் நுாற்றாண்டாக கருதலாம். இந்த வரலாற்று சிறப்புமிக்க கல்வெட்டையும், சிலைகளையும் தொல்லியல் துறை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ்பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர