விழுப்புரம் : மரக்காணம் அடுத்த பெருமுக்கல் சஞ்சீவி மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரன் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மலை உச்சியில் 1008 லிட்டர் நெய் தீபம் ஏற்றப்பட்ட உள்ளது . கார்த்திகை தீபப் பெருவிழாவை முன்னிட்டு, மாலை 5:00 மணிக்கு, முக்தியாஜல ஈஸ்வரருக்கு, பால், பன்னீர், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்த பின்னர்  மாலை 6:01 மணிக்கு, சிவன் பாடல்கள் முழங்க, ஸ்ரீலஸ்ரீ சிவஜோதி மோனசித்தர், 1008 லிட்டர் நெய் கொண்டு 7 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும்.


`சஞ்சீவி மலை' வரலாறு :


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து மரக்காணம் செல்லும் சாலையில் அமைந்திருக்கும் அழகிய ஊர் பெருமுக்கல். சோழா் கால வரலாற்றுப் பக்கங்களின் பொக்கிஷமாகத் திகழும் கல்வெட்டுகள் நிறைந்த அற்புதத் தலம் ஆகும், புராதன காலத்தில் `சஞ்சீவி மலை' என்று நம் மகரிஷிகளால் போற்றி வணங்கப்பட்ட இந்தத் தலத்தில் உள்ள மலையின் மீது முக்யாசலேஸ்வரா் திருக்கோயில் அமைந்திருக்க, அடிவாரத்தில் தாழக் கோயிலான காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.




திருக்காமகோட்ட நாச்சியாா் கோயில் என்று கல்வெட்டுகள் குறிப்பிடும் இந்தக் கோயில், சிதிலமடைந்த நிலையில் திகழ்கிறது. எனினும் முற்காலச் சோழா் காலம் முதல் தமிழக வரலாற்றினை அறிந்துகொள்ள அரிய ஆவணங்களாக, இக்கோயிலின் கல்வெட்டுத் தொடா்கள் அமைந்துள்ளன. 60 கல்வெட்டுகள் இங்குள்ளனவாம். இவற்றின் மூலம் சோழா், பாண்டியா், காடவராயா், சம்புவரையா் மற்றும் விஜயநகர மன்னா்களின் ஆட்சிக் காலத்தில் திருக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட கொடைகள் குறித்த செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.


இங்குள்ள கல்வெட்டுகளில் மிகவும் பழைமையானவை உத்தம சோழன் காலத்துக் கல்வெட்டுகளாகும். இவற்றையடுத்து முதலாம் குலோத்துங்கச் சோழன் மற்றும் விக்கிரமச் சோழன் காலத்துக் கல்வெட்டுகளும் உள்ளன. விக்கிரமச் சோழனின் காலத்தில்தான் மலைமீது உள்ள திருக்கோயில் புனரமைக்கப்பட்டுக்  திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக ஏராளமான கைங்கா்யங்கள் செய்த காக்கு நாயகனின் திருவுருவச் சிலையும், கோயிலின் கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட பெரியான் திருவனான சிறுத்தொண்டனின் சிலையும், திருக்கோயிலின் அா்ச்சகரான திருச்சிற்றம்பலமுடையான் அன்பா்க்கரசு பட்டனின் திருவுருவச்சிலையும் இங்கே அமைத்திருப்பது அற்புதம் ஆகும்.




இவ்வூரானது கல்வெட்டுகளில் ஜெயங் கொண்ட சோழ மண்டலத்து ஒய்மா நாடான விசய இராசேந்திர வளநாட்டு பெருமுக்கிலான கங்கைகொண்ட நல்லூா் என்று குறிப்பிடப் படுகிறது. முதலாம் ராசேந்திரன் காலத்தில் இவ்வூர் கங்கைகொண்ட நல்லூர் என்று பெயா் மாற்றப் பட்டிருக்கலாம் என்கிறார்கள் சரித்திர ஆய்வாளர்கள். பெருமுக்கலில் அமைந்துள்ள மலையானது திருமலை என்றும் முக்கியசைலம் என்றும் வணங்கப்பட்டுள்ளது. மலையின் மீது அருளும் ஈசனுக்கு ஸ்ரீமுக்தியாலீஸ்வரா், ஸ்ரீதிருவான்மிகை ஈஸ்வரமுடையாா் ஸ்ரீ பெருமுக்கல் உடையாா் என்று பல திருப் பெயர்கள் வழங்கப்படுகின்றன. 


தற்போது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள துறைகளில் மேற்கொள்ளப்படும் கட்டுமானம் மற்றும் மராமத்துப் பணிகளுக்காக பகிரங்க ஏலம் விடப்படுவதை அறிவோம்.  இவ்வாறே நம் மன்னர்களின் ஆட்சிக்காலத்திலும் திருப்பணி களுக்காகக் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பகிரங்க ஏலம் மூலம் விற்பனை செய்ததற்கான தகவல்கள் பெருமுக்கல் தலத்தின் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன.




நாட்டில் அறம் குறையக் கூடாது என்பதற்காக இத்திருக்கோயிலில் அறமிறங்கா நாட்டுச் சந்தி என்று ஒரு கூட்டு வழிபாடு முக்யாசலேஸ்வரப் பெருமானுக்கு நடத்தப்பட்டது குறித்தும் கல்வெட்டு தெரிவிக்கிறது. மெளரிய சாம்ராஜ்ஜியம் கோலோச்சிய கி.மு. 3-ம் நூற்றாண்டில் புகழ் வாய்ந்த சமயமாகத் திகழ்ந்தது ‘ஆசீவகம்.’ இம்மதம் பற்றிய பல்வேறு தகவல்கள் பாலி மற்றும் வடமொழி நூல்களில் இருந்தாலும், இச்சமயத்தின் ஆணி வோ் தமிழகமே என்று வரலாற்று ஆய்வாளா்கள் சிலர் தெரிவிக்கின்றனா். ஆசீவக மரபில் பிறவிப்பெருநோயைக் கடந்து வீடுபேற்றினை அடைந்த மூவரில் ‘நந்த வாச்சா’ என்பவரும் ஒருவா். மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகிலுள்ள மாங்குளத்தில் கணிநந்தாசிரியன் எனும் ஆசீவகத் துறவிக்கு, தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மற்றும் அவன் வாரிசுகள் கற்படுக்கைகள் அமைத்துக்கொடுத்துள்ளனா். அங்கு காணப்படும் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ள நந்தாசிரியன் எனும் பெயரே, பாலி மொழியில் நந்தவாச்சா என வழங்கப்பட்டுள்ளது. நந்தவாச்சா வானியல் அறிவியலில் நிபுணத்துவம் பெற்றிருந்த காரணத்தினால் `கணிநந்தாசிரியன்' எனவும் சிறப்பிக்கப்பட்டுள்ளாா். இவர் பெருமுக்கல் மலையில் முக்தி அடைந்ததாகவும், இதனால் `முக்கல் ஆசான் நல்வெள்ளையாா்” என இவா் புகழப்பட்டதாகவும் இத்திருத்தலம் குறித்த வரலாறு தெரிவிக்கின்றது. இதனால் இத்தல இறைவன் முக்தியாலீஸ்வரா் என்று வணங்கப்படுவதாகத் தெரிவிக் கின்றனர் ஆசீவக அறிஞா்கள்.




ஆற்காடு நவாபின் பிரதிநிதியான ஐதர்அலிகான் பெருமுக்கல் பகுதியை ஆட்சி புரிந்த காலம். அப்போது, சந்தா சாஹிபுவின் மகன் திருமணம் புதுச்சேரியில் நடைபெற்றது. இந்தத் திருமண விழாவில் புதுச்சேரியின் பிரெஞ்சு ஆளுநா் கலந்துகொள்ள வேண்டுமென, பெரு முக்கலை ஆண்ட  ஐதர்அலிகான் நேரில் சென்று தங்க நகைகளைப் பரிசளித்து அழைப்பு விடுத்ததாக, புதுவை ஆனந்தரங்கப் பிள்ளையின் டைரிக்குறிப்பு தெரிவிக்கிறது. இங்ஙனம் ஐதர் அலிகான் பிரெஞ்சு அரசாங்கத்துக்கு ஆதரவாக இருந்ததால், ஆங்கிலேயரின் பகையை எதிா்கொள்ள நேரிட்டது. பெருமுக்கலின் மீது போா் தொடுக்க தக்க தருணத்தை எதிா்பாா்த்துக் காத்திருந்த ஆங்கிலேயருக்கு அதற்கான நேரமும் வாய்த்தது. புதுச்சேரியைக் கைப்பற்ற பிரிட்டிஷ் தளபதி ‘கர்னா் அயா்கூட்’ தலைமையில் பெரும்படை திரண்டபோது, (1760-ல்) பெருமுக்கலையும் தாக்கி அங்கிருந்த செல்வங்களையும் கோட்டையையும் பிரிட்டிஷார் கைப்பற்றினார்களாம். பின்னா் 1780-ல் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் படைகள் பெருமுக்கல் கோட்டையைக் கைப்பற்றின. 1783-ல் மீண்டும் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டுக்குச் சென்ற இக்கோட்டையை 1790-ல் திப்புசுல்தான் கைப்பற்றினாா். அடுத்த சில ஆண்டுகளில் ஆங்கிலேயரின் ஆதிக்கம் மிகுந்திருந்தபோது மீண்டும் பெருமுக்கல் கோட்டை பிரிட்டிஷ் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இப்படி, சோமநாதபுரம் போன்று பலமுறை தாக்குதலுக்கு உட்பட்ட இத்திருத்தலத்தில், கோட்டையின் இடிந்த மதிற் சுவரும் சிதிலமடைந்த திருக்கோயிலும் மட்டுமே எஞ்சிநின்று பல நூற்றாண்டுகால வரலாற்றுக்குச் சாட்சியாய் திகழ்கின்றன.




போா்களால் சீரழிக்கப்பட்டது போதாதென்று இப்பகுதியில் உள்ள கல்குவாரிகளாலும் சிதைக்கப் பட்ட பெருமுக்கல் மலை, தற்போது நல்ல உள்ளம் படைத்த அன்பர்களின் முயற்சியாலும் நீதிமன்ற நடவடிக்கையாலும் அழிவிலிருந்து பாதுகாக்கப் பட்டுள்ளது. நம் முன்னோரின் பண்பாடு, கலாசாரம் மற்றும் வாழ்வியல் நெறிகளை எதிா் காலத் தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் களமான இப்புராதனச் சின்னம் மேலும் சிதிலம் அடையாமல் காப்பாற்ற வேண்டியது, நமது பெரும் கடமையாகும். பெருமுக்கல் மலைக்கோயிலில்  ஸ்ரீதட்சிணா மூர்த்தி அருள்பாலிக்கும் தேவகோட்டத்தின் மேல், அசோகவனத்தில் சீதாபிராட்டி சோகமே உருவாக அமா்ந்திருக்கும் சிற்பம் உள்ளது. சீதையைச் சுற்றி ஓர் அரக்கியும், குரங்கு முகம் கொண்ட வானரப்பெண் தன் குட்டியைத் தழுவியுள்ளது போன்றும், மற்றொரு பூதகணம் தழுவக் காத்திருப்பது போன்றும் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.


கோயிலின் பின்பகுதியில் தனிச் சந்நிதியில் புடைப்புச் சிற்பமாக அருள்பாலிக்கிறாா் அனுமன். அடுத்து அமைந்துள்ள திருக்குளத்தின் அருகில் குன்றுகளால் உருவான குகை உள்ளது. `சீதைக் குகை’ என்றழைக்கப்படும் இந்தக் குகையில்தான் லவனும் குசனும் பிறந்தார்கள் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை (லவன், குசன் பிறந்த இடம் மகாராஷ்டிர மாநிலம் கான்பூருக்கு அருகே என்றும் கூறுவர்). வால்மீகி மகரிஷி இம்மலையில் நீண்டகாலம் தவமியற்றி ஈசனின் பேரருளைப் பெற்றுள்ளாா். அவா் தவமியற்றிய குகை வால்மீகி குகை என்று வணங்கப்படுகிறது. மலையின் மீது கோடைக் காலத்திலும் வற்றாத அழகிய சுனை ஒன்றும் உள்ளது. தற்போது, பெருமுக்கல் திருத்தலத்தில் பிரதோஷ விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று ஈசனின் சிவலிங்கத் திருமேனியை தரிசித் துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு சாந்நித்தியத்துடன் அருள்பாலிப்பார் ஸ்வாமி. 




மகாசிவராத்திரி நாளில் இரவு முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. பெளர்ணமி நாளில் கிரிவலம் நடைபெறுகிறது. கார்த்திகை தீபத்தன்று இம்மலைமீதுள்ள கருங்கல் தீப மேடை யில் மஹா தீபம் ஏற்றப்படுகின்றது. தமிழக அரசின் தொல்லியல் துறை கட்டுப் பாட்டில் உள்ள இத்திருக்கோயிலின் புனரமைப்புப் பணிகளுக்காக, 2013ம் ஆண்டில் ஒருகோடி ரூபாய் ஒதுக்கியது தமிழக அரசு. இந்தத் தகவலை மகிழ்ச்சியுடன் ஊர்மக்கள் பகிர்ந்துகொண்டாலும், இத்தொகை மலைக் கோயிலையும் தாழக் கோயிலையும் புனரமைக்கப் போதுமானதாக இருக்காது என்பதே நிதர்சனம். தாழக்கோயிலான காமாட்சி அம்மன் கோயில் மிகவும் சிதிலம் அடைந்து திகழ்கிறது.


ஒருகாலத்தில், மலைக்கு மேல் அருள்பாலிக்கும் ஈசன் அா்த்தசாம பூஜை முடிந்ததும், கீழேயுள்ள தாழக்கோயிலில் எழுந்தருளி பள்ளியறை துயிலும் வழக்கம் உண்டாம். தற்போது இத்திருக்கோயில் முற்றிலும் சிதிலமடைந்திருக்கும் நிலையில், இதுபோன்ற பூஜைமுறைகள் கைவிடப்பட்டுள்ளன. பெருமுக்கல் மலைமீதுள்ள ஈசனை தரிசிக்கச் செல்வதற்குப் படிக்கட்டுகள் அமைக்கப் பட்டுள்ளன. தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இத்தலத்தின் மேன்மையை அகிலம் அறிய, அரசு முயற்சி எடுக்க வேண்டும். மலைக்கு எளிதாகச் செல்ல முறையாகப் படிக்கட்டுகள் அமைத்து மின்வசதி, குடிநீா்வசதி, பயணிகள் தங்குவதற்கு இடம் ஆகிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித்தர வேண்டும் என்று வேண்டுகின்றனர் இப்பகுதி மக்கள். மக்களின் விருப்பம் நிறைவேற்றப்பட்டால் ஆன்மிகத் தலமான இத்தலம் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் காட்சியளிக்கும்.