விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பனைத் தொழிலாளர்கள் கொண்டாடிய கார்த்திகை தீபத் திருவிழா, இதில் 50க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி மாவொளி சுற்றி கொண்டாட்டம்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே பூரிக்குடிசை கிராமத்தில் வாழ்ந்து வரும் பனைத் தொழிலாளர்கள் கார்த்திகை தீபத் திருவிழாவை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். இதனையொட்டி அகண்ட வெள்ளி விளக்கில் தீபத்தை ஏற்றி வைத்து பாரம்பரிய முறைப்படி மாவொளி சுற்று நிகழ்ச்சி நடைபெற்றது. பனை மரப் பொருட்களால் தயாரிக்கப்படும் இயற்கை மத்தாப்பு எனப்படும் மாவொளியை 50க்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் கூடி நின்று சுற்றினர். அப்போது மாவொளியில் இருந்து பல்வேறு வடிவங்களில் தீப்பொறிகள் பறந்து காண்போரை வியக்க வைத்தது. மேலும், தீப்பந்தைகளைக் கொண்டு பனைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்தி காட்டினர். கார்த்திகை தீபத் திருவிழாவன்று பாரம்பரிய முறையில் மாவொளி சுற்றுவது காலப்போக்கில் அழிந்து வருவதை தடுக்கும் வகையில் மாவொளி சுற்றும் நிகழ்ச்சியை பனைத் தொழிலாளர்கள் முன்னெடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
நாடு முழுவதும் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி வழிபடுவது மரபு. மேலும் கார்த்திகை பண்டிகையின் முக்கிய நிகழ்வாக மாவொளி சுற்றுவது பொது மக்களின் நம்பிக்கையாக உள்ளது. மாவொளி சுற்றுவதன் மூலம் தங்களின் துன்பங்கள் நீங்கி நன்மை பிறக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கை. இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அடுத்த நாரசிங்கபுரம் கிராமத்தில் பனையேறி பாண்டியன் என்பவர் பாரம்பரிய முறையில் மாவொளி தயார் செய்து வருகிறார்.