காரைக்காலில் பிரசித்தி பெற்ற மாங்கனித்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மாங்கனிகளை இறைத்து பக்தி பரவசத்துடன் வேண்டுதல் நிறைவேற்றினர் . அறுபத்து மூன்று நாயன்மார்களில் அமர்ந்த நிலையில் இருப்பவரும், அம்மை அப்பன் இல்லாத இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்ட சிறப்பு பெற்றவருமான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றினை உணர்த்தும் விதமாக ஆண்டு தோறும் காரைக்காலில் மாங்கனித் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். சுமார் 1600 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று நிகழ்வை இன்றும் நம் கண் முன் கொண்டு வரும் அத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாங்கனி இறைத்தல் இன்று (02.07.2022) காரைக்காலில் நடைபெற்றது. மாங்கனித் திருவிழா ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் நடத்தப்பட்டு வருகிறது. ஜூன் 30 ம் தேதி இரவு மாப்பிள்ளை அழைப்பு (பரமத்தர்), அம்மையார் திருக்கல்யாணம், மாலை கைலாசநாதர் கோயிலில் ஸ்ரீ பிச்சாண்டவருக்கு வெள்ளை சாற்று அலங்காரம் ஆகியவை நேற்று நடைபெற்றன.
3ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 3 மணிக்கு பிச்சாண்டவர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, காலை 10.30 மணியளவில் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் பவழக்கால் சப்பரத்தில் அம்மையார் கோயிலுக்கு அமுது படையலுக்கு புறப்படும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. வேதபாராயணம் முழங்க, சிறப்பு மேளம், நாகசுரம், ராஜவாத்தியங்கள் இசைக்க காரைக்கால் நகரின் முக்கிய வீதிகளில் சப்பரம் வீதியில் செல்கிறது. சப்பரம் புறப்பாடு தொடங்கியது முதல் பின்னால் வரும் பக்தர்கள் மீது ஒவ்வொரு வீடுகள், கட்டடங்களின் மேல் தளத்தில் நின்றவாறு மக்கள் மாங்கனிகளை இறைத்தனர்.
திருமணமாக வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும் உள்ளிட்ட வேண்டுதல் செய்துகொள்ளும் விதமாகவும், நேர்த்திக் கடன் நிவர்த்தியாகவும் பக்தர்கள் இவ்வாறு செய்வதாக கூறப்படுகிறது. இறைக்கப்படும் மாங்கனியை பிடித்து இறைவனின் பிரசாதமாக கருதி பக்தர்கள் வீட்டுக்கு எடுத்துச்சென்றனர். பக்தர்கள் அர்ச்சனை தட்டில் பட்டு வஸ்திரம், மாங்கனி வைத்து பிச்சாண்டவரை வழிபட்டனர். காரைக்கால் நகரின் பாரதியார் வீதி, கென்னடியார் வீதி, மாதாகோயில் வீதி, லெமேர் வீதி வழியாக பவழக்கால் சப்பரம் மாலை அம்மையார் கோவிலை சென்றடைந்ததும், புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) பிச்சாண்டவரை எதிர்கொண்டு அழைக்கும் வைபவம் நடத்தப்பட்டு, அமுதுபடையல் வழிபாடு நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது மேலும் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.