கள்ளக்குறிச்சி அடுத்த சூளாங்குறிச்சி மணிமுக்த்தா அணையில் தண்ணீர் நிரம்பியதால் இன்று அதிகாலை முன்னறிவிப்பு இன்றி 11,000 கன அடி தண்ணீர் திடீரென திறக்கப்பட்டு ஆற்றுப்பகுதியில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் கள்ளக்குறிச்சி மற்றும் தியாகதுருகம் பகுதியில் உள்ள ஆற்றில் கரை புரண்டு தண்ணீர் செல்கிறது.  இந்நிலையில் தியாகதுருகம் அடுத்த வடபூண்டி கிராமத்தைச்  சேர்ந்த  ராஜாராம் மகன் ஹரிஷ் என்கிற பரத் (20) என்ற கல்லூரி மாணவர் மணிமுக்தா ஆற்றுப்பகுதிக்கு இன்று காலை சென்றுள்ளார்.


அப்போது நீர்வரத்து அதிகமானதால் அவர் தண்ணீரில் சிக்கிக் கொண்டு ஆற்றின் நடுவே உள்ள பாறை கற்கள் மீது நின்று கொண்டு வெளியேற முடியாமல் தவித்து வந்தார். இந்த சம்பவத்தை அறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பரத்தை மீட்க முயற்சி செய்தும் மீட்க  முடியாததால் மீட்பு பணி மேற்கொள்ள தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர், 


சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினர் மற்றும் காவல் துறையினர் பரத்தை மீட்கும் பணியில் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு மணி முத்தாணையில் நீர் திறப்பு முறையாக முன் அறிவிப்பின்றி அணைய திறக்கப்பட்டதால் காலையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற கல்லூரி மாணவர் சிக்கிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது, இதுபோல சம்பவம் ஏற்படாமல் இருக்க அணை நீர் திறப்பு நேரங்களில் கிராம பகுதிகளுக்கு முன்னறிவிப்பு கொடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.