விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கடல் சீற்றம் குறைந்த நிலையில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.


தமிழகத்தில் மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் நான்கு நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் இருந்தனர். இந்த நிலையில் மாண்டஸ் அதிக சேதம் இன்றி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கரையை கடந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த வசவன்குப்பம் மீனவர் கிராமத்தில் மீனவர்கள் வழக்கம் போல் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றனர். மீன் பிடித்துவிட்டு மீண்டும் கரைக்கு திரும்பிய போது சேகர் மற்றும் அருள் ஆகிய இருவரது பைபர் படகுகளும் கடல் சீற்றம் காரணமாக ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி கடலில் கவிழ்ந்துள்ளது. இதை கண்ட சக மீனவர்கள் உடனடியாக படகுகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.


மேலும் மரக்காணம் காவல்துறையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மரக்காணம் போலீசார் மீனவர்களுடன் சேர்ந்து படகுகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு இரண்டு படங்களையும் மீட்டனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் ஐந்து லட்சம் மதிப்புள்ள இரண்டு படகுகள் மற்றும் வலைகள் ஆகியவை முற்றிலும் சேதம் அடைந்தது. கடல் சீற்றம் காரணமாக இரண்டு படகுகள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் மரக்காணத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.