கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர் ஆகிய 3 நகராட்சிகள் மற்றும் சங்கராபுரம், தியாகதுருகம், சின்னசேலம், மணலூர்பேட்டை, வடக்கனந்தல் ஆகிய 5 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 153 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 28ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இதில் கள்ளக்குறிச்சி நகராட்சியில் 145 பேர், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 130 பேர், திருக்கோவிலூர் நகராட்சியில் 125 பேர், சங்கராபுரம் பேரூராட்சியில் 72 பேர், தியாகதுருகம் பேரூராட்சியில் 85 பேர், சின்னசேலம் பேரூராட்சியில் 101 பேர், மணலூர்பேட்டை பேரூராட்சி்யில் 58 பேர், வடக்கனந்தல் பேரூராட்சியில் 81 பேர் என மொத்தம் 797 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் பெறப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களில் நேற்று நடைபெற்றது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தேர்தல் பார்வையாளரும், கலெக்டரின் நேர்முக உதவியாளருமான (வேளாண்மை) விஜயராகவன், தேர்தல் நடத்தும் அலுவலர் குமரன் ஆகியோர் தலைமையில் ஒவ்வொரு வார்டாக வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. இதை மாவட்ட தேர்தல் பார்வையாளர் மெர்சி ரம்யா ஆய்வு செய்தார். அப்போது தேர்தல் நடத்தும் உதவி அலுவலர்கள் சரவணன், உமாசங்கர், முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
வேட்பு மனுக்கள் பரிசீலனையின் முடிவில் வேட்பு மனுவை முறையாக நிரப்பாததாலும், உரிய ஆவணங்கள் இணைக்கப்படாதா காரணத்தால் கள்ளக்குறிச்சி நகராட்சியில் 3 பேர், உளுந்தூர்பேட்டை நகராட்சியில் 8 பேர், திருக்கோவிலூர் நகராட்சியில் 2 பேர், சங்கராபுரம் பேரூராட்சியில் 2 பேர், தியாகதுருகம் பேரூராட்சியில் 5 பேர், வடக்கனந்தல் பேரூராட்சியில் 9 பேர் என 29 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 768 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இது தவிர சங்கராபுரம் பேரூராட்சியில் 13-வது வார்டில் ஒருவரும், வடக்கனந்தல் பேரூராட்சி 17-வது வார்டு, 18-வது வார்டு ஆகியவற்றில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்