தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது, அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர் மாநகராட்சி, நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருந்தாசலம், வடலூர், திட்டக்குடி ஆகிய 6 நகராட்சிகள், அண்ணாமலைநகர், காட்டுமன்னார்கோவில், பரங்கிப்பேட்டை குறிஞ்சிப்பாடி, புவனகிரி, கங்கை கொண்டான், பெண்ணாடம், ஸ்ரீஷ்ணம், சேத்தியாததோப்பு, லால்பேட்டை, மங்கலம்பேட்டை, தொரப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், கிள்ளை ஆகிய 14 பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சியில் உள்ள 45 வார்டுகளிலும் போட்டியிட திமுக, அதிமுக, விசிக, அமமுக, மக்கள் நீதி மையம் என பல்வேறு கட்சிகளும் கடந்த 28 ஆம் தேதி முதல் கடைசி நாளன நேற்று வரை பல்வேறு கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் ஆர்வமாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகளுக்கு 350 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்த நிலையில் இன்று 64 பேர் மனுக்களை வாபஸ் பெற்றனர். எனவே தற்போது 286 பேர் கடலூர் மாநகராட்சிக்கு போட்டியிடுகின்றனர்.மேலும், சிதம்பரம், வடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி உள்ளிட்ட 6 நகராட்சிகளில் 180 வார்டுகளுக்கு 1078 பேர் வேட்பு மனு தாக்கல் செய்த நிலையில் இன்று 247 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றனர்.
இதில் வடலூர் நகராட்சியில் உள்ள 7 மற்றும் 16 வது வார்டுகளில் வேட்புமனு தாக்கல் செய்த அனைவரும் வாபஸ் பெற்றதால் திமுகவைச் சேர்ந்த சித்ரா சங்கர், விஜயராகவன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதே போல் 14 பேரூராட்சிகளில் உள்ள 222 வார்டுகளுக்கு 1092 பேர் வேட்புமனு தாக்கல் செய்து இருந்த நிலையில் 205 பேர் வேட்பு மனுக்களை திரும்பப் பெற்றதால் 879 பேர் தற்போது போட்டியிடுகின்றனர்.
எனவே காட்டுமன்னார்கோயில், கிள்ளை, குறிஞ்சிப்பாடி, மங்கலம்பேட்டை, பெண்ணாடம், சேத்தியாதோப்பு, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட பேரூராட்சிகளில் உள்ள 8 இடங்களில் வேட்பு மனுக்கள் வாபஸ் பெற்ற நிலையில் கிள்ளை பேரூராட்சியில் 2 பேரும் மற்ற பேரூராட்சிகளில் 6 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர், மேலும் வடலூர் நகராட்சியில் 2 பேர் போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஒட்டு மொத்தமாக கடலூர் மாவட்டத்தில் 10 போட்டி இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதற்கு முன்பாகவே கடலூர் மாவட்டத்தில் 37 மனுக்கள் நிராகரிக்கபட்டது குறிப்பிடத்தக்கது.