கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மூங்கில்பாடி செல்லும் சாலையில் தனியார் பள்ளியின் பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி பேருந்து பள்ளி நேரம் முடிந்த பின்னர் பள்ளி மாணவர்களை ஏற்றிக்கொண்டு சமத்துவபுரம் பகுதியில் இருந்து மூங்கில்பாடி செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது குறுகலான சாலையில் ஓட்டுனர் அதிவேகமாக பேருந்தை  இயக்கியதால் பேருந்து கவிழ்ந்து விபத்து ஆனது. இந்த தனியார் பள்ளி பேருந்தில் 30 பள்ளி மாணவர்கள் பயணித்த நிலையில் 20க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சின்னசேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் ஆறு பேருக்கு கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் படுகாயம் அடைந்த நிலையில் சின்ன சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்த தகவல் அறிந்த பெற்றோர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய தனது குழந்தைகளை மீட்டு இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வட்டாட்சியர் கமலக்கண்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்து நடைபெற்ற காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் இது தொடர்பாக வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறுகலான சாலையில் அதிவேகமாக தனியார் பள்ளி பேருந்தை ஓட்டுனர் இயக்கியதால் தான் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.