கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 124 காவலர்களை நேரில் அழைத்து விருப்பத்தின் பேரில் பணியிட மாறுதல் வழங்கினார் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன்.


நேற்று கள்ளக்குறிச்சி  மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பகலவன் தலைமையில் காவலர்களுக்கான பொது பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. அப்போது மூன்று வருடம் ஒரே காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் முதல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் வரை உள்ள 96 காவல்துறையினர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆயுதப்படையில் இருந்து தாலுக்கா காவல் நிலையத்திற்கு செல்லும் 28 காவலர்கள் என மொத்தம் 124 காவல்துறையினரிடம் பணியிட மாறுதல் தொடர்பாக விருப்ப மனு பெற்று பணியிட மாறுதல் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.


அப்போது சட்டம் & ஒழுங்கு பணிக்கு புதிதாக செல்லும் ஆயுதப்படை காவலர்களுக்கு சிறப்பாக பணிபுரிய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 124 காவலர்துறையினரை நேரில் அழைத்து அவர்களை மாவட்ட காவல்நிலைய காலிப்பணியிடங்களுக்கேற்ப அவர்களின் விருப்பத்தின் படி பணியிடமாறுதல் வழங்கியது  காவலர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவலர்கள் பொதுமக்கள் மத்தியில் நற்பெயர் ஏற்படுத்தும் விதமாக செயல்பட வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு காவல் துறை மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாகவும் அவர்களின் புகார்களை உடனடியாக விசாரித்து தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.