விழுப்புரம் அருகே உள்ள ஜானகிபுரம் ரயில்வே கேட் நிரந்தரமாக மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடுகளில் கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம், வரும் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மூடப்பட்ட ரயில்வே கேட்:


விழுப்புரம் அருகே ஜானகிபுரம் கிராமத்தில் இருந்து கண்டமானடி கிராமத்திற்கு செல்லும் சாலையின் குறுக்கே உள்ள ரயில்வே கேட் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிரந்தரமாக மூடப்பட்டது. திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் ஜானகிபுரத்தில் இருந்து கண்டமானடி, கொளத்தூர், பில்லூர், அரியலூர், சித்தாத்தூர், காவணிப்பாக்கம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லவும், அங்கிருந்து விழுப்புரம் நகரத்திற்குள் செல்லவும் சுமார் 5 கிமீ தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

மேலும், கண்டமானடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளி, தபால் நிலையம், கூட்டுறவு வங்கி உள்ளிட்டவைகளுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கடும் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர்.

கருப்பு கொடி:


நிரந்தரமாக மூடப்பட்ட ஜானகிபுரம் ரயில்வே கேட்டை திறக்க கோரி ரயில்வே நிர்வாகம், மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலருக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் கோரிக்கை வைத்தும் கூட மூடப்பட்ட ரயில்வே கேட்டை திறக்க யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஜானகிபுரம் கிராம மக்கள், ஜானகிபுரம் ரயில்வே கேட் மூடப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கிராம மக்கள், தங்களது வீடுகளில் இன்று கருப்பு கொடி ஏற்றி வைத்துள்ளனர்.

 

ஜானகிபுரம் கிராமத்தில் உள்ள 200க்கும் மேற்பட்ட வீடுகளிலும், சாலைகளிலும் கருப்பு கொடியை ஏற்றி வைத்து கிராம மக்கள் தங்களது எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும் கண்டமானடி ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள் அறிவித்துள்ளனர். தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் அரசியல் கட்சியினரை கிராமத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப் போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.