புதுச்சேரி: மோடி, அமித்ஷா மற்றும் பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்களையும்விட, வெள்ளைக்காரார்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள் என்றும், பொதுவெளியில் சனாதனத்தை பற்றி அமித்ஷா விவாதிக்க தயாரா என புதுச்சேரியில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி சவால் விடுத்துள்ளார்.


புதுச்சேரி : அரியாங்குப்பம் தொகுதி திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு சிலை திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மாபெரும் பொதுக்கூட்டம் வீராம்பட்டினம் விளையாட்டுத் திடலில் நடைபெற்றது. இந்த பொதுகூட்டத்தில், சிறப்பு விருந்தினர்களாக திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி மற்றும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா ஆகியோர் கலந்துகொண்டு கலைஞர் சிலையை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர். 


இந்த பொதுகூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி பேசுகையில், ”கலைஞர் கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதலமைச்சராக இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்கு ஏராளம். அவர் எத்தனை பிரதமர், குடியரசுத் தலைவர்களை உருவாக்கியுள்ளார். அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம். மோடியை விட அமித்ஷாவை விட பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்களை விட, ஆர்.எஸ்.எஸ். இருப்பவர்களை விட வெள்ளையர்கள் நல்லவர்கள். ஜாலியன்வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வருகை தந்து, எங்கள் அரசு உங்களுக்கு பாவம் செய்துவிட்டது என்று கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.


உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு புதுச்சேரியில் இருந்து சொல்கின்றேன். பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வாருங்கள் டில்லியில் பொதுவெளியில் லட்சம் பேர் கூடும் இடத்தில் சனாதனம் குறித்து விவாதிக்க நான் தயார் நீங்கள் தயாரா?” என சவால் விடுத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சர் உள்ளார். இல்லையெனில் வேறு வேலைக்கு சென்று இருப்பார். சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆளுநர், எங்களால்தான் ஆடு மேய்க்காமல் அண்ணாமலை இன்று ஐ.பி.எஸ், வானதி ஸ்ரீனிவாசன் இன்று வழக்கறிஞர் என்றார்.


மேலும் பேசிய திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ ராசா, நான் திறந்த வெளியில் சொல்கின்றேன் மோடி, அமித்ஷா, பாஜகவில் உள்ள அனைத்து அமைச்சர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களைவிட வெள்ளைக்காரார்கள் நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள் என்றார். மனிப்பூரில் 200க்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு பழங்குடி இனத்தைச் சேர்ந்த இளம் பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்துச் சென்று காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். இதனை நியாயப்படுத்தும் அங்குள்ள முதலமைச்சரை நாடாளுமன்றத்தில் மோடி, அமித்ஷா பாராட்டுகின்றனர். ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த ஆட்சியை தூக்கி எரிவதற்கு நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும்” என பேசினார்.


மேலும் பொதுகூட்டத்தில் திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமார், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி, செந்தில்குமார், சம்பத் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


 



ஆ ராசாவுக்கு ஆளுநர் தமிழிசை பதிலடி :


சனாதன ஒழிப்பால்தான் ஆளுநர் பதவியில் தமிழிசையும், பாஜக தலைவர் பதவியில் அண்ணாமலையும், அமைச்சர் பதவியில் அமித் ஷாவும் இருப்பதற்கு காரணம் என்று எம்.பி.ராசா கூறியிருந்தது தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஆளுநர் ஆ.ராசா சனாதனத்தை தவறாக புரிந்து கொண்டுள்ளார். சனாதன ஒழிப்பு மூலம் சாதியை ஒழிப்பதாக கூறும் சூழலில், ராசாவால் ஏன் அவரது கட்சியில் தலைவராக முடியவில்லை? முதல்வராகிவிடுவாரா? உதயநிதிக்கு தரும் அங்கீகாரம் அனைவருக்கும் தந்து விடுவார்களா?.


நான் கருவறைக்குள் செல்ல முடியுமா என்று டுவிட்டர் பக்கத்தில் கேட்கிறார்கள். சில பழக்க வழக்கங்கள் மதங்களில் நடைமுறையில் உள்ளன. மற்ற மதங்களில் மதம் சார்ந்த கலாசாரங்களை, பழக்க வழக்கங்களை பின்பற்றும் போது விமர்சிக்காதவர்கள், இந்து மதத்தை மட்டும் தொடர்ந்து விமர்சனம் செய்கிறார்கள். சாதி பாகுபாடு இங்கு இல்லை, சமதர்ம சமுதாயம்தான் சனாதனம். சனாதனம் என்பதற்கு தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறை தான் சனாதனம் என கூறினார்.


சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என கூறுகிறார்கள். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள், சாதி ரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், தொகுதி தராதீர்கள். ஏன் திமுகவில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதல்வர் பதவி தர மறுக்கிறீர்கள்? திமுகவில் ஒரு குடும்பத்தைத் தாண்டி வேறு யாரும் முக்கியத்துவம் பெற முடியாது. ஆ.ராசா பதற்றத்தில் பேசுகிறார். நான், அண்ணாமலை என பலரும் பொதுவெளியில் இருந்து கஷ்டப்பட்டு இந்த இடத்துக்கு வந்துள்ளோம். எனவே, அதற்கும், ராசா கூறும் விஷயத்துக்கும் சம்பந்தமில்லை. சனாதனத்தை எதிர்த்து பேசுவதால், அவரால் திமுகவில் உயர் பதவிக்கு வந்து விட முடியுமா? ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தானே உயர் பதவிகளுக்கு வர முடிகிறது.


சனாதனத்தை எதிர்ப்பவர்கள் முதலில் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்துக்கு முதலில் எதிர்ப்பு தெரிவியுங்கள். உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே திமுகவில் இல்லையா? ஆனால், அவர்களால் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. நாங்கள் இருந்த இயக்கத்தில் பரந்துபட்ட வாய்ப்பு கிடைக்கிறது. ஆ.ராசா திமுகவின் தலைவராகிவிட முடியுமா? உதயநிதியும், அவர் தந்தையும் உண்மையாக சாதியினால்தான் சனாதனத்தை எதிர்க்கிறோம் என்று கூறுகின்றனர்.


அனைவருக்கும் வாய்ப்பு தருகிறோம் என்று கூறுகின்றனர். திமுகவில் மிகவும் அடி மட்டத்தில் உள்ளவர்களை அக்கட்சியின் தலைவராகவோ? முதல்வராகவோ? ஆக்கிவிட முடியுமா?  நீங்கள் எதையும் செய்வதில்லை. உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்? தமிழகம் கல்வியில் உயர பெருந்தலைவர் காமராஜர் போட்ட விதை. நீங்களே எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆ.ராசா உங்கள் கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா? என முதலில் சொல்லுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள். இவ்வாறு பேசினார்