புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டு குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு ஆளுநர் தயாரா என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.


முன்னாள் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-


நாட்டில் பாரதிய ஜனதா கட்சி  பலம் பொருந்திய கட்சிபோல மாயயை உருவாக்கி வருகிறது. இப்போது அகில இந்திய அளவில் மாற்றம் வந்துகொண்டுள்ளது. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தலை சந்திக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் போன்ற தலைவர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளை பிரித்து பாஜக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது. விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. 25 கோடி மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளனர். தொழில்துறை நலிந்துள்ளது. மக்களும் மாற்றத்தை விரும்புகிறார்கள். மத்திய அரசின் மோசமான ஆட்சியை கண்டித்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 150 நாட்களில் 3 ஆயிரத்து 500 கி.மீ. தூரம் ராகுல்காந்தி பாதயாத்திரை செல்ல உள்ளார்.


7-ந் தேதி வில்லியனூரில் இருந்து புதுவைக்கு பாதயாத்திரை நடத்த உள்ளோம். 8, 9, 10 தேதிகளில் புதுவை காங்கிரசார் ராகுல் காந்தியின் பாத யாத்திரையில் கலந்து கொள்கிறோம். கடந்த ஆண்டில் உள்ளதையே மீண்டும் பட்ஜெட்டில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். கடந்த ஆண்டுக்கான விவசாய கடன் தள்ளுபடிக்கே இன்னும் அரசாணை வழங்கப்படவில்லை.  புதுவையில் போலியான அரசு நடக்கிறது. 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 20க்கும் குறைவானவர்கள் தான் உள்ளனர். அவர்களுக்கு உதவித்தொகை ரூ.7 ஆயிரம் என்று அறிவிக்கிறார்கள். 1.87 லட்சம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருந்து அரசின் உதவித்தொகைகளை பெற்று வருகிறார்கள்.


இந்தநிலையில் அரசின் எந்த உதவியும் பெறாதவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்கிறார்கள். இதெல்லாம் அரசு மக்களை ஏமாற்றும் வித்தை. மத்திய அரசிடம் கூடுதல் நிதி பெறாததால் நிதி நெருக்கடியில் சிக்கி அரசு தவிக்கிறது. புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களே சட்டசபையில் குற்றஞ்சாட்டி உள்ளனர். இதுபோன்ற குற்றச்சாட்டில் தான் டெல்லியில் சி.பி.ஐ. விசாரணை நடக்கிறது. புதுவையில் ஆளுநர் ஏன் வாய்மூடி உள்ளார். இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு தயாரா பணியிடங்களை நிரப்பவில்லை காரைக்கால் போலகத்தில் தொழிற்சாலைகள் தொடங்க நாங்கள் 25 பேருக்கு லைசென்சு வழங்கினோம்.


இந்த ஆட்சியில் 100 ஏக்கர் நிலம் கேரள நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆளுநர் விசாரிக்க வேண்டும். அமைச்சர்களின் அலுவலகங்கள் ஊழல் ஏஜெண்டுகளின் அலுவலகங்களாக மாறிவிட்டன. முதலமைச்சர் ரங்கசாமி 10 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்பப்போவதாக கூறியுள்ளார். நாங்கள் ஏற்பாடு செய்திருந்த 390 போலீசார் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சி அமைந்து 1½ ஆண்டு ஆகியும் வேறு எந்த அரசு பணியிடமும் நிரப்பப்படவில்லை என நாராயணசாமி கூறினார்.