புதுச்சேரியில் 7,500 பேர் கலந்து கொள்ளும் தேசிய இளைஞர் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் நேரில் ஆய்வு செய்தார். புதுச்சேரியில் தேசிய இளைஞர் தினவிழா வரும் 12 ஆம் தொடங்கி 16 ஆம் தேதி வரை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தனியார் ஹோட்டலில் நடந்த நிகழ்வில் தேசிய இளைஞர் தின  விழாவுக்கான லோகோ, விழா தூதுவராக புதுச்சேரி மாநில விலங்கான அணில் கார்ட்டூன் படங்களை துணைநிலை ஆளுநர் தமிழிசை வெளியிட்டார். இந்த நிகழ்வில் முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், கல்வியமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பங்கேற்றனர்.




பின்னர் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறுகையி: - தேசிய இளைஞர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெவ்வேறு மாநிலங்களில் நடைபெறும். இந்த ஆண்டு பிரதமர் மோடியின் விருப்பத்தின் பேரில் புதுவையில் நடக்கிறது. இந்த விழாவில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த 7 ஆயிரத்து 500 இளைஞர்கள் கலந்து கொள்கின்றனர். தேசிய இளைஞர் விழாவானது, ‘திறன் மிகு இளைஞர்கள்-ஆற்றல் மிகு இளைஞர்கள்’ என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் இருந்து இளைஞர்கள் வருவதால் புதுச்சேரியின் திறனை வெளிப்படுத்த இந்த நிகழ்வு பெரிதும் உதவும்.


அரவிந்தர், மகாகவி பாரதியார், விவேகானந்தர் ஆகியோர் இளைஞர்களுக்கு முன் மாதிரிகளாக திகழ்ந்தவர்கள். நமது பாரம்பரியத்தை இளைஞர்களின் முன்நிறுத்தவே இந்த நிகழ்வை நடத்துகிறோம். பிரதமர் மோடி இந்த விழாவை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மோடி தலைமையிலான ஆட்சி மத்தியில் அமைந்த பின்னர் வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தற்போது புதிய நிறுவனங்களை தொடங்குவோர், சுயதொழில் செய்பவர்கள், வங்கி சார்ந்த துறைகள், தொழில்முனைவோர் அதிகரித்துள்ளனர். நாட்டில் தற்போது வேலை கேட்பவரை விட வேலை தருவோர் அதிகரித்துள்ளனர்.


கொரோனா காலத்தில் நாடு முழுவதும் 145 கோடி டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டுள்ளது. தற்போது 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு சிலர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.




வானொலி சேவையை நாங்கள் முடக்கவில்லை. விரிவுப்படுத்தவே செய்கிறோம். பிரதமர் உரையாற்றும் ‘மன்கீ பாத்’நிகழ்ச்சியை வானொலியில் கேட்போர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தற்போது தொலைபேசியில் கேட்கும் வகையில் தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தி உள்ளோம். இந்திய விளையாட்டு ஆணையத்தில் பெறப்பட்ட பாலியல் புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறோம். மத்திய அரசு கொண்டு வந்துள்ள  புதிய கல்விக்கொள்கையை  பல மாநிலங்கள் ஏற்றுகொண்டுள்ளன. நாடுமுழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. கிராமப்புற சாலைகளும்   புதுப்பிக்கப்பட்டுள்ளன என கூறினார். தொடர்ந்து அவர் இந்திராகாந்தி சிலை அருகே உள்ள பா.ஜ.க. மாநில தலைமை அலுவலகத்திற்கு சென்று எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.