புதுச்சேரி மற்றும் மரக்காணத்தில் கடந்த நவம்பரில் இருந்து தற்போது வரை இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 46 ஆலிவ்ரிட்லி வகை ஆமைகளை வனத்துறையினர் கண்டெடுத்து புதைத்துள்ளனர். இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வமானது ஆலிவ்ரிட்லி வகை ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமும் இதுதான். இந்த வகை ஆமை இனங்கள் இந்திய பெருங்கடல், பசுபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வசிக்கக் கூடியவை. இத்தகைய ஆலிவ்ரிட்லி ஆமைகள் புதுச்சேரி, கடலூர், மரக்காணம் உள்ளிட்ட கடலோர பகுதிக்கு ஆண்டு தோறும் நவம்பர் முதல் மே மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. குறிப்பாக, மணற்பரப்பு அதிக முள்ள மரக்காணம் வாசவன் குப்பம் முதல்  புதுச்சேரி பகுதிகளான கனகசெட்டிக்குளம், மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம் வரை கடலோரப் பகுதிகளில் இந்த ஆமைகள் அதிகளவு முட்டையிட்டு செல்வது வழக்கம்.



ஒரு ஆமை 100 முதல் 120 முட்டைகள் வரை இட்டுச் செல்லும். பெரிய ஆமைகளாக இருந்தால் 190 முட்டைகள் வரை இடுவதுண்டு. அழிந்து வரும் நிலையில் உள்ள இந்த ஆலிவ்ரிட்லி ஆமைகளை பாதுகாக்க வனத்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. ஆண்டு தோறும் முட்டைகளை புதுச்சேரி மற்றும் விழுப்புரம் வனம் மற்றும் வன விலங்கு பாதுகாப்புத் துறையினர், உள்ளூர் இளைஞர்களின் துணையுடன் சேகரித்து பாதுகாத்து பின்னர் குஞ்சு பொரித்ததும் பத்திரமாக கடலில் விடும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.


அதே நேரத்தில் இனப்பெருக் கத்திற்காக தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிக்கு வரும் ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்குவதும் தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தவளக்குப்பம், புதுக்குப்பம் கடலோர பகுதியில் நேற்று 3 ஆலிவ்ரிட்லி ஆமைகள் அடிபட்ட நிலையில் இறந்து கிடந்தன. கடுமையான துர்நாற்றமும் வீசியது. இதனை அப்பகுதியில் சென்றவர்கள் கண்டு புதுச்சேரி வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் சுமார் 30 முதல் 35 கிலோ எடை கொண்ட அந்த 3 ஆமைகளையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.பின்னர் அவற்றை கடற்கரையிலேயே பள்ளம் தோண்டி புதைத்தனர்.



இனப்பெருக்கத்துக்காக விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி மற்றும் புதுச்சேரி கடற்கரைக்கு வரும் ஆலிவ்ரிட்லி ஆமைகள் முட்டையிட்டு, திரும்பிச் செல்லும் போது படகு என்ஜினில் சிக்கி அடிபட்டு இறந்து விடுகின்றன. அவ்வாறு இறக்கும் ஆமைகள் ஆங்காங்கே கரை ஒதுங்குகின்றன. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து தற்போது வரை மரக்காணம், வசவன்குப்பம், அழகன்குப்பம், எக்கியார்குப்பம், புதுச்சேரி பகுதியான மூர்த்திக்குப்பம், புதுக்குப்பம், கனகசெட்டிக்குளம் வரையிலான கடலோர பகுதிகளில் இறந்து ஒதுங்கிய 46 ஆமைகளை கண்டெடுத்து கடற்கரையிலேயே புதைத்துள்ளனர். சில தினங் களுக்கு முன்பு கூட ஒரே நாளில் 7 ஆமைகள் வரை இறந்து கரை ஒதுங்கியாது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண