கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே வாலீஸ்பேட்டை எனும் கிராமத்தை சேர்ந்தவர் மரிகிருந்தாள், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் அபூர்சாமி இவர்கள் இருவருக்கும் இடம் சம்மந்தமாக கடந்த சில நாட்களாக தகராறு இருந்து வந்து உள்ளது. இது குறித்து மரிகிருந்தாள் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். ஆனால், வெகு நாட்கள் ஆகியும் இது சம்பந்தமாக ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையினர் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. 



 

இந்த நிலையில் துணை ராணுவத்தில் பணி புரியும் மரிகிருந்தாள் மகன் பாண்டியன் சின்னப்பன்ராஜ் தான் பணியாற்றும் இடத்தில் இருந்து தபால் மூலமாக தமிழக முதல்வர், தமிழக காவல் துறை தலைவர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சேத்தியாதோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கு ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி, அளிக்கப்பட்ட புகாரின் பேரில் சரியாக நடவடிக்கை எடுக்கவில்லை என புகார் மனு அனுப்பி இருந்தார். 



 

பின்னர் இதனால் கோபமுற்ற காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி கடந்த  சிலநாட்களுக்கு முன் இரவு சுமார் 7 மணியளவில் பாண்டியன் சின்னப்பன்ராஜ் வீட்டிற்கு சென்று அவரது மனைவி ஆரோக்கிய அச்சிலியிடம் ஆபாச வார்த்தைகளால் திட்டி அவரை கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் "உன்னை அடித்தால் தான் உன் கணவன் வருவான்", என கூறி எட்டி உதைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரின் செல்போனை பிடுங்கி காவல் துறை வண்டியில் ஏற்ற முயன்றபோது கிராம மக்கள் அவரை முற்றுகையிட்டு தடுத்து உள்ளதாக கூறப்படுகிறது, பின்னர் அதனால் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி அந்த பெண்ணை விட்டு விட்டு சென்று உள்ளார்.

 


 

இந்த நிலையில் கர்ப்பிணியான ஆரோக்கிய அச்சிலி உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசரப் பிரிவில் சேர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு அவருக்கு இயல்பான பிரசவத்திற்கு அடுத்த மாதம் 18 ஆம் தேதி நாள் குறித்து இருந்த நிலையில் காவல் ஆய்வாளர் பாண்டிச்செல்வி உதைத்ததின் பேரில் உடல்நிலை பாதிக்கப்பட்டு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து பிரசவம் நடைபெற்று குறை பிரசவத்தில் குழந்தை பிறந்து உள்ளது, என பாதிக்கப்பட்ட ஆரோக்கிய அச்சிலி தெரிவித்தார். பின்னர் தற்பொழுது, தன் நிறைமாத கர்ப்பிணி மனைவியை தாக்கிய காவல் ஆய்வாளர் பாண்டிசெல்வி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாண்டியன் சிண்ணபன்ராஜ் சேத்தியாத்தோப்பு துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்து உள்ளார்.

 



 

ஸ்ரீமுஷ்ணம் காவல் துறையின் இந்த அராஜக போக்கை உயர் அதிகாரிகள் விசாரணை செய்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகின்றனர், இந்நிலையில் காவல் ஆய்வாளர் ஆரோக்கிய அச்சிலி வீட்டிற்கு சென்ற பொழுது ரெகார்ட் செய்யப்பட்ட ஆடியோ பதிவு தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.