தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடற் பகுதியில் டிசம்பர் 5ஆம் தேதி ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அடுத்த 48 மணி நேரத்தில் இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் இதனால் வருகின்ற டிசம்பர் எட்டாம் தேதி வரை வட தமிழக பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கடலூரில் காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்த நிலையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த ஒரு மணி நேரமாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர், கூத்தப்பாக்கம், மற்றும் கடலூர் புதுவை எல்லைப் பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. ஏற்கனவே வடகிழக்கு பருவ மழை அக்டோபரில் தொடங்கிய நிலையில் கடலூர் சீர்காழி ஆகிய மாவட்டங்கள் மிகுந்த சேதங்களை சந்தித்தது.
இந்த நிலையில் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தப் பட்டியலில் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் இடம்பெற்று இருப்பதும், தானே, நீலம், வர்தா என புயலாக இருந்தாலும் புயல் என்றாலும் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் கடலூர் மாவட்டம் இயற்கை பேரிடர்கள் மற்றும் சீற்றங்களால் பாதிக்கப்படுவதாலும் கடலூர் மாவட்ட மக்கள் கடந்த ஒரு மணி நேரமாக பெய்து வரும் மழையை கண்டு அச்சத்தில் இருக்கின்றனர்.