விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகே சித்தாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜன் மகன்  பட்டதாரி இளைஞர் ஏசுராஜ், இவர் கடந்த மார்ச் 19ம் தேதி இவரது மொபைல் போனில் டெலிகிராமில் தெரியாத எண்ணில் இருந்து பகுதிநேர வேலை, தொடர்புக்கு என ஒரு லிங்க் வந்துள்ளது. இந்த லிங்கிற்குள் ஏசுராஜ் சென்ற போது, தொடர்பு கொண்ட நபர், தான் அனுப்பும் ஓட்டலின் புகைப்படத்திற்கு கூகுல் ரிவ்யூ பைவ் ஸ்டார் ரேட்டிங் கொடுத்தால் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.


டெலிகிராம் மூலம் மோசடி


அதே போல் செய்து, ஏசுராஜ் 950 ரூபாய் பெற்றுள்ளார். பின், மர்ம நபர் அனுப்பிய டெலிகிராம் ஐ.டி, லிங்கிற்குள் சென்ற ஏசுராஜ், தனக்கென யூசர் ஐ.டி., பார்ஸ்வேர்டு உருவாக்கியுள்ளார். சிறிய தொகையை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என மர்ம நபர் கூறியதைக் கேட்டு, ஏசுராஜ், கடந்த 20ம் தேதி முதல், 23ம் தேதி வரை மர்ம நபர் பணம் அனுப்ப கூறிய, வங்கி கணக்குகளுக்கு 7 லட்சத்து 17 ஆயிரத்து 300 ரூபாயை மொபைல் ஆப் மூலம் அனுப்பியுள்ளார்.


பின்னர் அவருக்கு வர வேண்டிய பணம் வராததை கேட்ட போது மர்ம நபர் மேலும் அதிகமாக பணம் கேட்டுள்ளார். இதன் பின்தான், ஏசுராஜிற்கு பணத்தை இழந்தை தெரிந்ததும் விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


டிரேடிங் செய்வதாக கூறி மோசடி:


அதேபோல், கிழக்கு பாண்டி ரோட்டை சேர்ந்தவர் சந்திரகாந்த், பி.இ, பட்டதாரி இளைஞர், இவரது மொபைல் எண்ணை கடந்த மார்ச் 10ம் தேதி, மர்ம நபர் ஒருவர், வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்துள்ளார். பின் தொடர்பு கொண்ட அந்த நபர், டிரேடிங்கில் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் பெறுவது பற்றி மெசேஜ் மற்றும் லிங்கை அனுப்பியுள்ளார். இந்த லிங்கிற்குள் சந்திரகாந்த் சென்றதும், ஒரு நிதி நிறுவன அப் மொபைலில் டவுன்லோடு ஆகியுள்ளது. பின், சந்திரகாந்த் கடந்த ஏப்ரல் 12ம் தேதி முதல் கடந்த 27ம் தேதி வரை மர்ம நபர் கூறிய வங்கி கணக்குகளுக்கு 8 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அனுப்பியுள்ளார்.


பின், அவர் நேற்று முன்தினம் 24 ஆயிரத்து 500 ரூபாய் மட்டும் திரும்ப பெற்றுள்ளார். மீதி பணத்தை சந்திரகாந்த எடுக்க முயன்ற போது, மர்ம நபர் அதிக பணத்தை கேட்டுள்ளார். அப்போது தான் சந்திரகாந்திற்கு, 8 லட்சத்து 500 ரூபாயை இழந்தது தெரியவந்துள்ளது. இந்த நிலையில் விழுப்புரம் சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.