கடலூர் சிதம்பரத்தில் அரசுப்பேருந்து ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது. சிதம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து சீர்காழி நோக்கி செல்லவிருந்த அரசு பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


பேருந்தின் பெட்ரோல் டாங்கி தீப்பற்றி எரிந்ததாகக் கூறப்படுகிறது. அந்த பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் பேருந்தில் தீயை அணைக்க முயற்சி செய்து வருகின்றனர். ஆனால், 75 சதவிகித பேருந்து எரிந்துவிட்டது.


இதேபோல சமீபத்தில், கரூர் பேருந்து நிலைய சிக்னலில் கார் பேட்டரி பழுது காரணமாக திடீர் தீ விபத்து ஏற்பட்டது. புகை வருவதை கண்டு அதிர்ஷ்டவசமாக காரில் இருந்து தனது செல்லப்பிராணியான நாயுடன் அதன் உரிமையாளர் வெளியேறினார். அப்போது, பொதுமக்கள் கூடியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


கரூர் அடுத்த வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் துணை முதல்வராக பணிபுரிந்து வருகிறார். மேலும், அகில இந்திய எரிபந்து கழகத்தின் தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.


சொந்த ஊரான கரூருக்கு தனது செல்லப்பிராணியான நாயுடன் காரில் புறப்பட்ட மணி, கரூர் நகரப் பகுதியான பேருந்து நிலைய சிக்னலில் இரவு சுமார் 7.15 மணியளவில் வந்து கொண்டிருந்தார். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து திடீரென புகை வெளியே வருவதை கண்ட அவர், உடனடியாக தனது செல்லப்பிராணியுடன் வெளியேறினார்.





புகை வெளியேறிய சில நிமிடங்களில் காரின் முன் பகுதியில் தீ பற்றி மளமளவென எரிந்தது. பேருந்து நிலைய சிக்னல் அருகில் காரில் தீ பற்றி எரிந்ததைக் கண்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக கரூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.


தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பற்றி எரிந்த தீயை தண்ணீரை பீச்சி அடித்து சுமார் 15 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முன் பகுதியில் பற்றி எரிந்த தீ விபத்து காரணமாக எஞ்சின் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. பரபரப்பான இரவு நேரத்தில் கரூர் மாநகரில் காரில் பற்றி எரிந்த தீ விபத்தை பொதுமக்கள் கூடி நின்று பார்த்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.