விழுப்புரம்: ஃபெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு குறித்து விழுப்புரத்தில் ஆய்வு செய்த மத்திய மதிப்பீட்டு குழுவினர் பாதிக்கப்பட்ட இடங்கள் வயல் வெளிகளில் இறங்கி ஆய்வு செய்தனர்.
ஃபெஞ்சல் புயலினால் விழுப்புரம் மாவட்டத்தில் 240 கிராமங்களும், விழுப்புரம் நகரப்பகுதிகளும் பாதிப்படைந்தன. விளை நிலங்களை பொறுத்தவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 80 ஆயிரத்து 560 ஹெக்டேர் பாதிப்படைந்தன. மாவட்டம் முழுவதும் 75 சதவிகிதம் விவசாய நிலங்கள் பாதிப்படைந்தன. அதில் நெல் 58 ஆயிரம் ஹெக்டரும் உளுந்து 13 ஆயிரம் ஹெக்டரும், மணிலா 6 ஆயிரம் ஹெக்டர், கரும்பு 3 ஆயிரம் ஹெக்டர் மக்காசோளம் 150 ஹெக்டர் பருத்து 59 ஹெக்டர் பாதிப்படைந்தன.
புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரத்திற்கு 7 பேர் கொண்ட குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தனர். மத்திய உள் துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான ஒரு குழுவினர் அரசூர், இருவேல்பட்டு, திருவென்ணைய் நல்லூர், சிறுமதுரை திருக்கோவிலூர் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதேபோன்று மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் பொன்னுசாமி தலைமையில் மற்றொரு குழுவினர் வைலாமூர், கருங்காலிப்பட்டு, சென்னாகுனம், அரகண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் உள்ள பகுதியில் இறங்கி பயிர் சேதம் குறித்தும், தென்பெண்ணையாற்ற்றின் கரையோர பகுதி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீட்கபட்டவர்களிடம் வெள்ளபாதிப்பு குறித்து கேட்டறிந்தனர். விழுப்புரம் மாவட்டத்தில் இன்று ஆய்வினை முடித்த பிறகு நெய்வேலிக்கு செல்லும் மத்திய மதிப்பீட்டு குழுவினர் நாளை கடலூர், புதுச்சேரியில் ஆய்வு செய்கின்றனர். புயல் வெள்ள பாதிப்பு குறுத்து பேரிடர் மற்றும் வருவாய் துறை முதன்மை செயலர் அமுதா ஒரு குழவினருக்கும், மற்றொரு குழுவிற்கு வருவாய் துறை ஆணையர் ராஜேஷ் லக்காணி, மாவட்ட ஆட்சியர் பழனி விளக்கி கூறினர்.