புதுச்சேரி: புதுச்சேரியில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் இணைய வழி மோசடியில் சிக்கி 271 நபர்கள் 10,48,00,549 ( பத்து கோடியே 48 லட்சத்து 549 ரூபாய்) பணத்தை இழந்துள்ளனர்.


புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் புதுச்சேரியைச் சார்ந்த 271 நபர்கள் பல்வேறு முறையில் இணைவழி மோசடிக்காரர்களிடம் சிக்கி 10 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை இழந்து உள்ளனர். அதில் மிக அதிக பணம் இழப்பு ஆன்லைன் டிரேடிங் என்ற முறையில் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்தால் மிக அதிகமாக லாபம் உங்களுக்கு கிடைக்கும் என டெலிகிராம்,  இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் மூலமாக ஒரு லிங்கை அனுப்பி ஏமாற்றி எட்டு கோடி ரூபாய்க்கு மேல்  பணத்தை இழந்துள்ளனர்.


அது தவிர்த்து டெலிகிராம் டாஸ்க் என்ற முறையில் 16 நபர்களும் குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருகிறோம் என்ற முறையில் 11 புகார்களும் fack கால் புதிய நபர்களிடமிருந்தும் அறிமுகமில்லாத போலி அழைப்புகள் சம்பந்தமாக 42 புகார்கள் பதிவாகி இருக்கின்றது. அதே போல் ஆன்லைன் பர்சேஸ் இன்ஸ்டாகிராம் டெலிகிராமில் வருகின்ற லிங்கில் அல்லது விளம்பரங்களில் மிகக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைக்கிறது என நம்பி 29 நபர்கள் பணத்தை செலுத்தி பொருள் அனுப்பாமல் பொருள் கிடைக்காமல் ஏமாற்றப்பட்டுள்ளனர். மேலும் வங்கி மேலாளர் பேசுவது போல் OTP எண்ணை கேட்டு 19 நபர்கள் பணத்தை இழந்துள்ளனர்.


இணைய வழி மோசடிகள் சம்பந்தமாக முதுநிலை காவல் கண்காணிப்பாளர் நாராசைதன்யா ஐபிஎஸ் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்வது என்னவென்றால் இணைய வழியில் வருகின்ற பெரும்பாலான ஷேர் மார்க்கெட் வேலைவாய்ப்பு, குறைந்த விலையில் பொருட்கள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஓடிப் எண்களை கேட்பது, குறைந்த வட்டிக்கு கடன் வாங்கி தருகிறோம், இன்ஸ்டாகிராம், டெலிகிராமில் குறைந்த விலைக்கு பொருட்கள் கிடைக்கிறது  போன்ற இணைய வழி விளம்பரங்களில் பொதுமக்கள் எச்சரிக்கைகளோடு இருந்து பணத்தை இழக்காமல் இருக்க வேண்டும் என இணை காவல்துறை சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.


விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்


இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.


அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர். தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.


சிக்கிக் கொள்ளாதீங்க... வங்கி ஓடிபி எண் சொல்லாதீங்க


மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது. இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.