விழுப்புரம்: தோல்வி என்பது வரும் போகும், அது அரசியலாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும் தோல்வி இருக்கும் என்றும் உடல்நிலை சரியாக இருந்தால் தான் மனநிலை சரியாக இருக்கும் அப்படி இருக்கும் போது எந்த சோதனைகளையும் எதிர்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.


விளையாட்டு வீரர்கள் மாநில அளவில் விளையாட்டி போட்டிகளில் பங்கு பெறும் விதமாக தமிழக முதலமைச்சர் கோப்பை போட்டி ஒவ்வொரு மாவட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நடத்தப்பட்ட போட்டியில் 17ஆயிரம் விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்றனர்.  விளையாட்டு போட்டிகளில் பங்கு பெற்று முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு காகுப்பத்திலுள்ள அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரியில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், திமுக எம்எல்ஏ லட்சுமணன் புகழேந்தி, ஆட்சியர் பழனி கலந்து கொண்டு பதக்கங்கள், கோப்பைகள்,  சான்றிதழ்கள் வழங்கினர். அதனை தொடர்ந்து பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, தமிழக முதலமைச்சர் அனைத்து விளையாட்டுகளிலும் பயிற்சி பெற்று விளையாடிக் கொண்டிருப்பதாகவும் அவருடன் தானும் சேர்ந்து கிரிக்கெட் விளையாடி இருப்பதாகவும் அடுத்த ஆண்டும் நடைபெறும் முதலமைச்சர் கோப்பையில் பொதுபிரிவில் நானும் கலந்து கொண்டு விளையாட உள்ளதாகவும் தெரிவித்தார். தமிழக முதலமைச்சர் தினந்தோறும் 5 கிலோ மீட்டர் நடைபயிற்சியும், மாலை நேரத்தில் ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சியும் மேற்கொள்வதாகவும் அனைவரும் விளையாட்டு போட்டிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்றும் உடலை பாதுகாக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும் வலியுறுத்தினார்.


இளைஞரான உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக ஆக்கப்பட்டுள்ளதாகவும், தான் அமைச்சராக இருந்ததால் தான் தனது இரு பிள்ளைகளுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகவும், கைப்பந்து கழக தலைவர் பதவி வழங்கபட்டுள்ளதாக சிலர் தெரிவிக்கிறார்கள். ஆனால் அப்படி இல்லையென்றும் விளையாட்டில் ஆர்வமிருந்ததால் தான் இருவருக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும் உலக அளவில் நடைபெறும் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற வேண்டுமென முதலமைச்சரும், விளையாட்டு துறை அமைச்சர் செயல்பட்டு கொண்டிருப்பதால் தான் செஸ் போட்டி தமிழகத்தில் நடைபெற்றது என தெரிவித்தார்.


தோல்வி என்பது வரும் செல்லும். அது அரசியலாக இருந்தாலும் விளையாட்டாக இருந்தாலும் தோல்வி இருக்கும் என்றும் உடல்நிலை சரியாக இருந்தால் தான் மனநிலை சரியாக இருக்கும் அப்படி இருக்கும் போது எந்த சோதனைகளையும் எதிர்கொள்ள முடியும், கல்வியிலும், விளையாட்டிலும் முதன்மையாக வர வேண்டும் என்ற எண்ணம் மாணவர்கள் மத்தியில் வர வேண்டும் எனவும் கூறினார்.