விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லாததால் அறைகள் அனைத்தும் திறந்து கிடந்த காட்சிகளின் வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

 

இரவு நேரங்களில் மருத்துவர்கள் பணியில் இல்லை 

 

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் பகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் மூலம் மயிலம் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இங்குள்ள மருத்துவமனை கட்டிடம் மழை காலங்களில் மழைநீர் ஒழுகும் நிலையில் நோயாளிகளுக்கும் மருத்துவர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்து வருகிறது. இது குறித்து பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைக்கப்பட்டதை அடுத்து இந்த மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிகிறது. ஆனால் இங்கு பணியில் உள்ள மருத்துவர்கள் காலை நேரங்களில் சரியான நேரத்திற்கு பணிக்கு வருவதில்லை எனவும்,

 



அப்படியே தாமதமாக வந்தாலும் தங்களது இருக்கைகளில் அமர்ந்து நோயாளிகளை கவனிக்காமல் வட்டமேஜை மாநாடு நடத்திவிட்டு அதன் பின்னரே நோயாளிகளை கவனிக்க துவங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக மயிலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற நிலையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் யாரும் மருத்துவமனையில் இல்லாமல் அனைத்து அறைகளும் திறந்த நிலையில் கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த நோயாளிகளின் உறவினர்கள் அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.