விழுப்புரம்: தளவானூர் அருகே ஓடும் தென்பெண்ணையாற்றின் கரையோரம் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்புக் கள ஆய்வில், தொன்மை வாய்ந்த சுடுமண்ணால் ஆன அகல் விளக்கு கண்டெடுக்கப்பட்டன.

Continues below advertisement

தொன்மை வாய்ந்த சுடுமண்ணால் ஆன அகல் விளக்கு கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், தளவானூர் அருகே ஓடும் தென்பெண்ணையாற்றின் கரையோரம் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்புக் கள ஆய்வில், தொன்மை வாய்ந்த சுடுமண்ணால் ஆன அகல் விளக்கு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் அவர்கள் விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

கண்டெடுக்கப்பட்ட அகல் விளக்கின் அமைப்பு:

தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் அவர்கள் தளவானூர் தென்பெண்ணையாற்றில் ஆய்வு மேற்கொண்டபோது, தரையின் மேற்பரப்பில் இந்த அரிய அகல் விளக்கைக் கண்டெடுத்துள்ளார்.

Continues below advertisement

அமைப்பு மற்றும் நிறம்: கண்டெடுக்கப்பட்ட இந்த சுடுமண் அகல் விளக்கு தட்டு வடிவில் காணப்படுகிறது.

திரி அமைப்பு: இதில் நான்கு திரிகளை இட்டு விளக்கேற்றும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

கலைநயம்: இந்த விளக்கு அழகிய கலைநயத்துடன் சிவப்பு நிறத்தில் பளபளப்பாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும்.

விளக்கின் அவசியம் மற்றும் பண்டைய நாகரிகம்: பண்டைய காலத்தில் மனிதன் வாழ்வில் நெருப்பு முக்கியப் பங்கு வகித்தது. மனிதன் நாகரிகம் அடைந்து, புதிய கற்காலத்தில் ஓரிடத்தில் நிலையாகத் தங்கி வாழ ஆரம்பித்தபோது, வெளிச்சம் அளிப்பதற்காக விளக்கின் தேவை அவசியமானது.

ஆரம்ப காலகட்டங்களில், ஈரமான களிமண்ணை எடுத்து கைவிரலால் சற்று குழியாகச் செய்து, சிறிய விளக்குகளாக மாற்றிப் பயன்படுத்தத் தொடங்கினர். இந்த எளிமையான விளக்குகள்தான் படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்றைய அகல் விளக்குகளாக பரிணமித்தன. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளில் சுடுமண் அகல் விளக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

கையினால் செய்யப்பட்ட விளக்குகள்: பையம்பள்ளி, மோதூர், அப்புகல்லு ஆகிய இடங்களில் நடைபெற்ற அகழ்வாய்வுகளில், கையினால் வடிவமைக்கப்பட்ட சிறிய அகல் விளக்குகள் கண்டறியப்பட்டுள்ளன.

அதிக அளவில் கண்டறியப்பட்ட இடங்கள்: மதுரை கீழடி, ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, வெம்பக்கோட்டை ஆகிய முக்கியத் தொல்லியல் தளங்களிலும் சுடுமண் அகல்விளக்குகள் அதிக அளவில் கண்டறியப்பட்டு, அக்கால மக்களின் பயன்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளன.

வரலாற்று முக்கியத்துவம்

தற்போது தளவானூர் தென்பெண்ணையாற்றில் கண்டறியப்பட்டிருக்கும் இந்த அகல் விளக்கு, அரிக்கமேடு பகுதியில் நடந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட அகல் விளக்குகளுடன் ஒற்றுப் போகிறது என்று தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் குறிப்பிடுகிறார்.

இந்த ஒற்றுமையின் மூலம், பழங்கால மக்கள் தென்பெண்ணையாற்றின் கரையோரப் பகுதிகளிலும் வாழ்ந்திருக்கின்றனர் என்பதைத் தெளிவாக அறிய முடிகிறது. இந்த அகல் விளக்கு, இப்பகுதியின் தொன்மை மற்றும் பண்டைய நாகரிகத்தின் தொடர்ச்சியைக் குறிக்கும் ஒரு முக்கியமான தொல்லியல் சான்றாகும்.