விழுப்புரம்: மரக்காணம் அருகே புதுச்சேரி அரசு பேருந்தும் மினி லோடு வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் லோடு வேன் ஓட்டுனர் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகேயுள்ள பனிச்சமேடு குப்பம், கிழக்கு கடற்கரை சாலையில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி புதுச்சேரி அரசு பேருந்து 25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது பனிச்சமேடு குப்பம் அருகே அரசு பேருந்து ஓட்டுனர் முன்னே சென்ற வாகனத்தை முந்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது எதிர் திசையில் மரக்காணம் பகுதியிலிருந்து மினிலோடு வேனில் சோப்பு, பினாயில் ஏற்றி கொண்டு வந்த வாகனத்தின் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மினி லோடு வேனை ஓட்டி வந்த புதுச்சேரி சுதானா நகரை சார்ந்த ராமச்சந்திரன் என்பவரின் மகன் லட்சுமணன் (55) என்பவர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.


விபத்து குறித்து தகவலறிந்து வந்த மரக்காணம் காவல் துறையினர் விபத்தில் சிக்கி கொண்ட மினி லோடு வேனை சாலையின் ஓரத்திலிருந்து அப்புறப்படுத்தினர். தொடந்து, மினி லோடு வேனில் சிக்கி கொண்ட சோப்பு வியாபாரியின் உடலை ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்டு புதுச்சேரி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தினால் சென்னை - புதுச்சேரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் அரை மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து மரக்காணம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.